‘முனி’ பட வரிசையில் ‘காஞ்சனா 2’ படத்தை மீண்டும் அதே பயமுறுத்தலுடன் இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். பேய் படங்களின் ரசனை என்பதே நம்மை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறார்களோ, அதில்தான் அடங்கியிருக்கிறது. அதை அளவுக்கதிகமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். வழக்கம் போல இந்த பாகத்திலும் இரவு நேரத்தில் பாத்ரூமுக்குத் தனியாகப் போவதற்கே பயப்படும் அதே பயந்தாங்கொள்ளியாக ராகவா லாரன்ஸ். ஆனால், வேலையில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல் இந்த முறை ஒரு டிவி நிறுவனத்தில் காமிராமேனாக வேலை பார்க்கிறார். அந்த டிவியில் வேலை பார்க்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் டாப்ஸீ மீது அவருக்குக் காதல். தான் வேலை பார்க்கும் டிவி முதலிடத்திலிருந்து இரண்டாமிடத்திற்கு இறங்கியதால் புதிதாக ஏதாவது ஒரு பரபரப்பான நிகழ்ச்சியை தயாரித்து ஒளிபரப்பி முதலிடத்திற்குக் கொண்டு வரலாம் என யோசனை சொல்கிறார் டாப்ஸீ. பேய் சம்பந்தப்பட்ட ‘செட்-அப்’ நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்கலாம் என்ற அவரது ஐடியாவை அனைவரும் ஏற்க, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட குழுவினருடன் ஒரு பாழடைந்த பங்களாவில் தங்களது ‘செட்-அப்‘ நிகழ்ச்சியைப் படமாக்கச் செல்கிறார்கள். அங்கே, நிஜமாகவே பேய் வர அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் பரபரப்பான பயமுறுத்த வைக்கும் மீதிக் கதை. அப்பாவித்தனமான முகம் ராகவா லாரன்ஸுக்கு நிறையவே கை கொடுக்கிறது. டாப்ஸீ மீது இருக்கும் காதலுக்காக தன்னுடைய பயத்தை கூட மறைத்துக் கொண்டு அவருடன் பேய் பற்றிய நிகழ்ச்சியைப் படமாக்கச் சென்று தன்னை தைரியசாலியாகக் காட்டிக் கொள்வதில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தை விட பிளாஷ்பேக்கில் வரும் ‘மொட்டை சிவா’ கதாபாத்திரத்திலும், பேயாக வரும் ‘மொட்டை சிவா’ கதாபாத்திரத்திலும் அசத்தலாக நடித்திருக்கிறார். தனக்கான ஜோடியாக ‘வெள்ளாவி’ நடிகைகளைத் தேர்வு செய்வதில் ராகவாவுக்கு தனி பிரியம் போல. இந்தப் படத்தில் ‘ஆடுகளம்’ வெள்ளாவி புகழ் டாப்சீயைத் தேர்வு செய்திருக்கிறார். வேதிகா, லட்சுமிராய் வரிசையில் இந்த ‘முனி 3’-லும் டாப்சீ கொஞ்சமே கொஞ்சம் கிளாமராக நடித்து கவர்கிறார். ஆனாலும், ‘கங்கா’ ஆவி புகுந்த பின் டாப்சீயிடம் காணப்படும் நடிப்பு மிரட்டலோ மிரட்டல். அழகுப் பெண்ணை இப்படி ‘ஆவி’யை புக வைத்து அதிரடியாக நடிக்க வைத்திருக்கிறார்கள். நித்யா மேனன் பிளாஷ்பேக்கில் கொஞ்சமாக வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். ‘ஓ காதல் கண்மணி’யில் பார்த்த மாடர்ன் மங்கையா இந்த கிராமத்துப் பெண் ‘கங்கா’ என ஆச்சரியப்பட வைக்கிறார். இப்போதுதான் நித்யாவை ரசிகர்கள் நினைத்துப் பார்க்கும் நேரம் வந்திருக்கிறது. மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் நகைச்சுவைக் காட்சிகளில் ‘டபுள் மீனிங்’ அதிகம், ‘பி அன்ட் சி’ ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கியது போல் உள்ளது. ஜெயப்பிரகாஷின் வில்லத்தனம் பல படங்களில் பார்த்த ஒன்றுதான். ஆனால், ‘அப்படிப்பட்ட’ மகனுக்காக அவர் செய்யும் வில்லத்தனம் அடேங்கப்பா ரகம். கோவை சரளா, வழக்கம் போல கலகல சரளா. இருந்தாலும் முந்தைய ‘காஞ்சனா’ படத்தில் அவருக்கும் தேவதர்ஷினிக்கும் இடையிலான காட்சிகளில் இருந்த கலகலப்பை கோவை சரளா – ரேணுகா கூட்டணியால் நெருங்க முடியவில்லை. ‘காஞ்சனா’வில் படம் முழுவதும் பயமுறுத்தல் ஒரு பக்கம் இருக்க, படம் முழுவதும் நகைச்சுவைத் தோரணங்கள் அதிகம் இருந்தன. இந்த ‘காஞ்சனா 2’ வில் அந்த நகைகைச்சுவைத் தோரணம் மட்டும் மிஸ்ஸிங். அதை இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்திருக்கலாம். எஸ்.எஸ்.தமன், லியோன் ஜேம்ஸ் , சி.சத்யா, அஸ்வமித்ரா நான்கு இசையைமப்பாளர்களும் பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும், பேய்கள் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன.