ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’.
ஆலப்புழையிலிருந்து தனது நான்கு பெண் குழந்தைகளுடன், கடத்தப்பட்ட கணவன் முத்துப்பாண்டியைத் தேடி வந்த அன்னக்கொடியை எப்படியாவது துரத்தி அடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள் முத்துப்பாண்டியின் அண்ணன் செண்பகபாண்டியன் குடும்பத்தினர். பாண்டியம்மாளின் கருணையால் அன்னக்கொடியின் மூத்த மகள் கௌரி வக்கீலாகிறாள். இரண்டாவது மகள் மனோகரி இன்ஸ்பெக்டராகிறாள்.
செண்பகபாண்டியனின் மகன் தங்கதுரை, தனது அத்தை மகள் திலகாவை திருமணம் செய்யும் நோக்கத்தில் நெருக்கமாகிறான். மொத்த குடும்பமும் அவர்கள் திருமணத்தை ஆதரிக்கிறது. ஆனால் தங்கதுரை, தன் திருமணத்தில் அன்னக்கொடி குடும்பத்தைச் சார்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறான்.
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்க, காஞ்சனா என்கிற இளம் பெண் அந்த குடும்பத்திற்குள் நுழைந்து சூறாவளியை ஏற்படுத்துகிறாள். காஞ்சனா யார்? தங்கதுரை – திலகா திருமணம் திட்டமிட்டபடி நடைபெற்றதா? வக்கீலாக இருக்கும் கௌரியும், இன்ஸ்பெக்டராக இருக்கும் மனோகரியும் இப்பிரச்சினைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைத்தார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடிச் செல்கிறது ‘அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்’ தொடர்.
50வது அத்தியாத்தைத் தொட்டு இத் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.