உத்தம வில்லன் – விமர்சனம்

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மைல் கல்லை தொட்டிருக்கிறார். ரமேஷ் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்தப் படம் வழக்கமான படமும் அல்ல, வழக்கமான கமல்ஹாசனின் படமும் அல்ல. கமல்ஹாசனின் வித்தியாசமான மாறுபட்ட படம். இந்த முறை நெகிழ்ச்சியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு கண் கலங்கவும் வைத்திருக்கிறார் இந்த ‘உத்தம வில்லன்’. நடிப்புக்காகவே பிறந்த கலைஞன் ஒருவனின் வாழ்க்கைதான் இந்த ‘உத்தம வில்லன்’. அதை எப்படித்தான் இப்படியெல்லாம் நடிக்கிறாரோ என வியக்க வைக்கும் கமல்ஹாசன் கையாண்டிருப்பதை விட வேறு என்ன பெரிய பொருத்தம் கிடைத்துவிடும். மனோரஞ்சன் (கமல்ஹாசன்) மிகப் பெரிய கமர்ஷியல் நட்சத்திரமாக உருவாகக் காரணமாக இருப்பவர் அவருடைய மாமனார் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் (விஸ்வநாத்). மனோரஞ்சனுக்கு மூளையில் உள்ள கட்டியால் விரைவில் மரணம் நிச்சயம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். இறப்பதற்குள் தன்னுடைய குருநாதர் மார்கதரிசி (கே.பாலசந்தர்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என மனோரஞ்சன் முடிவெடுக்கிறார்.தன்னுடைய உடல்நிலை பற்றி மனைவியிடமும், மாமனாரிடமும் மறைக்கிறார். இதனிடையே மனோரஞ்சன், மார்கதரிசி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானதும் மாமனாரும், மனைவியும் மனோரஞ்சனை விட்டு விலகுகிறார்கள். இதன் பின் தன்னுடைய ஆசைப்படி குருநாதருடன் படத்தை எடுத்து முடிக்கிறாரா, பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் இணைகிறார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஒரு நடிகரின் நடிப்பைப் பற்றி இன்னமும் நாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது கண்டிப்பாக கமல்ஹாசனின் நடிப்பாகத்தான் இருக்கும். தனக்கும் தன்னுடைய முன்னாள் காதலிக்கும் பிறந்த மகள் ஒருவர் இருக்கிறார் என ஜெயராம் சொல்லச் சொல்ல அதற்கு அவர் காட்டும் வித விதமான முகபாவங்களை அவரைத் தவிர வேறு யார் தர முடியும். முறைத்துக் கொண்டு செல்லும் மாமனாரிடமும், மனைவியிடமும் தன் நிலையைப் பற்றிச் சொல்லாமல், தன்னுடைய குருநாதர் மீது வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தும் காட்சியைப் பற்றி எவ்வளவு பாராட்டிச் சொன்னாலும் அது மிகையில்லை. தன்னிடமே சரியாகப் பேசாத மகனிடம் தன் நிலையைப் பற்றி விளையாடிக் கொண்டே விளையாட்டாகச் சொல்லும் போது அப்பாவைப் பற்றி மகன் புரிந்து கொண்டு கட்டிப் பிடித்து அழும் காட்சியில் கண் கலங்காமல் யாரும் இருக்க முடியாது. கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றிச் சொல்ல இந்த ஒன்றிரண்டு காட்சிகளே போதும், மீதியை நீங்களே திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் தனியாக இவர்தான் நாயகி என்று யாரையும் சொல்லி விட முடியாது. முக்கியமான நான்கு பெண் கதாபாத்திரங்களுமே கதாநாயகிகள்தான். ஒருவர் கமல்ஹாசனின் கள்ளக் காதலி ஆன்ட்ரியா, இரண்டாமவர் கமல்ஹாசனின் மனைவி ஊர்வசி, மூன்றாமவர் கமல்ஹாசனின் மகள் பார்வதி, நான்காமவர் கமல்ஹாசனின் திரையுலக ஜோடி பூஜா குமார். அவரவர் கதாபாத்திரங்களில் நால்வருமே ‘நச்’ என்று நடித்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் என்று இவர்களை சொல்லி விட முடியாத அளவில் கமல்ஹாசனின் மேனேஜராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், குருவாக நடித்திருக்கும் கே.பாலசந்தர், மாமனாராக நடித்திருக்கும் கே.விஸ்வநாத். இவர்களில் மற்ற இருவரும் எண்ணற்ற நட்சத்திரங்களை நடிக்க வைத்து பெயர் வாங்கிய இயக்குனர்கள், இவர்கள் சிறப்பாக நடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், தான் தவறு செய்து விட்டேன் என கமல்ஹாசனிடம் சொல்லி கண் கலங்குகிறாரே எம்.எஸ்.பாஸ்கர், நம்மையும் கலங்க வைத்து விடுகிறார். நாசர், சண்முகராஜன், ஞானசம்பந்தன் படத்துக்குள் படமாக வரும் ‘உத்தம வில்லன்’ கதாபாத்திரத்தில் முடிந்த வரை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கு இவர்கள் நகைச்சுவை நிறையவே பிடிக்கும். ஜிப்ரான் இசையில் ‘காதலா…’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.

Read Previous

Papanasam – Official Trailer

Read Next

‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது

Most Popular