அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்லவன்’ நாவல் தற்போது 120 நிமிடங்கள் கொண்ட முழு நீள 2டி திரைப்படமாக அனிமேஷன் படங்களின் அசத்தல் தன்மையோடும் அசல் கதையின் ஓட்டம் மாறாமலும் தயாராகி வருகிறது.
5 எலிமெண்ட்ஸ் எண்டர்டெய்னர் மற்றும் வளமான தமிழகம் நிறுவனத்துடன் இணைந்து சரவணராஜா தயாரிக்கிறார். எம். கார்த்திகேயன் இயக்குகிறார், பி.லெனின் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த அனிமேஷன் படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட இயக்குநர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கல்யாண மாலை மோகன், கார்ட்டூனிஸ்ட் மதன், தயாரிப்பாளர் சரவணராஜ ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பேசியதாவது,
“இது எம்.ஜி.ஆரே முயன்ற முயற்சி என்று அறிந்தேன். ‘பொன்னியின் செல்வன்’ கதை முதல் அத்தியாயம் ஆடி மாதத்தில்தான் ஆடி18ல்தான் தொடங்கும். அது போல இந்த டிரைலர் வெளியீடும் ஆடி மாதம் நடக்கிறது மிகவும் பொருத்தமான ஒன்று.
பின்னர்தான் ஆடி மாதம் பீடை மாதம் என்றானது ஜேஸ்டா மாதம் என்றானது. 8ஆம் நூற்றாண்டு வரை ஆடிமாதம் மங்கலமாதமாகவே கருதப்பட்டது. 9ஆம் ,10ஆம் நூற்றாண்டில் பீடை மாதம் என்று மாற்றப்பட்து. ஜேஸ்டாதேவி என்று வணங்கப்பட்ட வழிபாட்டுத் தெய்வம் வெளியேற்றவும் பட்டது. இளையவளான லட்சுமி வழிபடப்பட்டாள்.
சோழர் சாம்ராஜ்யம் பிரம்மாண்டமானது. 846 முதல் 1279 வரை 433 ஆண்டுகள் ஆண்ட வம்சம் உலகத்திலேயே சோழ வம்சம்தான். உலகில் தமிழ்நாட்டை காட்சிப்படுத்த சோழர் கால பெருமையை காட்டலாம். பழமை, நிர்வாகம், கலை, வீரம் ஆட்சி, கட்டடக்கலை, இலக்கியம் என எல்லாமும் நிறைந்தது.
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய போது இது ‘நான் எழுப்பிய கோவில்’ என்கிறான் ராஜராஜன். ராஜராஜனால் கட்டப்பட்டது என்று பல இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ராஜராஜன் சரியான நிர்வாகி. ராஜராஜன் வரலாற்று அறிவு நிறைந்தவன்.
எல்லாவற்றையும் சரியாகப் பதிவு செய்திருக்கிறான். இது தொடர்பாக ஏராளமான செப்பேடுகள் உள்ளன. ஆனைமங்கலம் செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் 56, திருவாலங்காடு செப்பேடுகள் ,
திருச்செங்கோடு செப்பேடுகள் 8 என உள்ளன. அவற்றை வைத்து கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.
கதையில் வரும் ஆழ்வார்க்கடியான் இட்டுள்ள நாமம் வடகலையா? தென்கலையா என மதன் கேள்வி எழுப்பினார். என்னைக் கேட்டால் தென் கலையே போடலாம் என்பேன். எவ்வாறு என்றால் அனிருத்த பிரம்மராயர் அன்பிலைச் சேர்ந்தவர். அவரது தாயார் தங்கத்தட்டில் வைக்கும் உணவைத்தான் பெருமாள் சாப்பிடுவாராம். அனிருத்த பிரம்மராயர் தென்கலை. எனவே அவரது சீடன் ஆழ்வார்க்கடியானும் தென்கலையாகவே இருக்கமுடியும் என்று கூறலாம்.
இங்கே ஜனநாதன் வந்துள்ளார் இதுவும் பொருத்தமே. ஏனென்றால் ராஜராஜனின் 15 பெயர்களில் ஜனநாதனும் ஒன்று. மதுரை சோழவந்தான் அருகே ஜனகை மாரியம்மன் கோவில் உள்ளது. ஜனகை என்பது என்ன என்றால் ஜனநாத மங்கலம். குமுளி எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும் ராஜராஜன் கட்டியதுதான். கேரள எல்லை என்பதால் ஏதோ பாகிஸ்தான் எல்லை போல தமிழர்கள் பதற்றத்துடன் போய் வழிபட வேண்டியிருக்கிறது.
மலையாளிகள் 1 லிட்டர், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் கூட கொண்டு போக முடியாதபடி கெடுபிடிகள் செய்கிறார்கள். தோற்றவர்களைக் கேவலப் படுத்துவது அன்றைய கேரள மன்னன் பரசுராமன் பழக்கம் . அன்றைய பரசுராமன் முதல் இன்றைய மலையாளிகள் வரை கேவலப் படுத்துவது தொடர்கிறது.
நம் தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்காக கேரளா போகிற 300 லோடு காய்கறியை இப்போதும் தடுத்து வழிமறித்து தினமும் பூச்சிமருந்து சோதனை செய்கிறார்கள்,” என ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பேசினார்.
2017ம் ஆண்டு இந்த ‘பொன்னியின் செல்வன்’ 2டி அனிமேஷன் படம் வெளியாக உள்ளது.