வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் 72வது வெனிஸ் திரைப்பட விழாவில் ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல், இத்தாலி, மனித உரிமைகள் பற்றிய சினிமா’ பிரிவில் விருதை வென்றுள்ளது.
இந்தியத் திரைப்பட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்பட விழாவில் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், படத்தில் நடித்துள்ள ‘அட்டகத்தி’ தினேஷ் , சமுத்திரக்கனி, இப்படத்திற்கு தன்னுடைய நிஜ அனுபவத்தை கதையாக எழுதிக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட மற்ற படங்களை விட மனித உரிமைகள் பற்றி உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் ‘விசாரணை’ படம் வெளிப்படுத்தியதற்காகவும், தற்போது சமூக சேவகராக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதற்காகவும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஆனந்தி , சரவணா சுப்பையா, கிஷோர் , முருகதாஸ் , முத்துகுமார், சந்திரன் , அஜய் கோஷல், மூனார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசை- ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு- ராம லிங்கம், படத்தொகுப்பு – கிஷோர்.டி.இ , கதை – சந்திரகுமார் , கலை – ஜாக் , சண்டைப் பயிற்சி- திலீப் சுப்ராயன், ஒலிக் கலவை – பிரதாப், போர் பரம்ஸ் உதய குமார் , தயாரிப்பு நிர்வாகி – எஸ்.பி.சொக்கலிங்கம், நிர்வாக தயாரிப்பாளர் : எஸ்.வினோத்.
தனுஷின் வுண்டர் பார் பிரைவேட் லிமிடெட் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இனைந்து தயாரித்துள்ள ‘விசாரணை’ திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ள லைகா நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.