தமிழில் தனிப்பட்ட இசை ஆல்பங்கள் வெளி வருவது மிகவும் குறைவாகவே உள்ளது. எப்போதோ ஒரு முறைதான் இப்படிப்பட்ட ஆல்பங்கள் வருகின்றன.
அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற ஒரு இசை ஆல்பத்தை தற்போது உருவாக்கி வருகிறார்கள்.
இயக்குநர் வாசு பாஸ்கரிடம் உதவியாளராக பணியாற்றிய மகேஷ் இயக்கும் இந்த ஆல்பத்திற்கு தயா சைரஸ் இசையமைத்துள்ளார்.
ஸ்மைல் ப்ளீஸ் ஆல்பத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புன்னகை ஒன்றுதான்…’ என்ற பாடலுக்கு ஸ்ரீகாந்த் தேவா நடித்து, நடனமும் ஆடியிருக்கிறார். இப்பாடல் காட்சியை மலேஷியாவிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் படமாக்கி உள்ளார்கள்.
இந்த மியூஸிக் ஆல்பத்தில் ஸ்ரீகாந்த் தேவா மட்டுமின்றி, பிரேம்ஜி, போபோ சசி ஆகிய இசையமைப்பாளர்களும் நடிக்க உள்ளனர்.
‘நமச்சிவாயா…’ எனத் தொடங்கும் பாடல் வேத மந்திரம் ராக் இசை வடிவில் கலந்து ஃபியூஷன் பாடலாகி இருக்கிறது. ‘நான் ஒரு காதல் ரோமியோ…’ என்ற பாடலில் பிரேம்ஜி, நடித்து நடனமாடியிருக்கிறார். அவருடன் ‘கலாபக் காதலன்’ படத்தின் கதாநாயகியாக நடித்த அக்ஷராவும் நடித்துள்ளார்.
வழக்கமான மியூசிக் ஆல்பமாக இல்லாமல் ஒரு திரைப்படத்துக்குத் தேவையான உழைப்பைக் கொட்டி இந்த ஆல்பத்தை உருவாக்கி உள்ளார்களாம். முன்னணி காஸ்ட்யூம் டிரசைனரான வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறார்.
இந்த மியூஸிக் ஆல்பத்தில் மிரள வைக்கும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளனவாம். ஸ்ரீகாந்த் தேவா, பிரேம்ஜியை அடுத்து போபோ சசி பாடி நடிக்கும் பாடல் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாம். அதில் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்க உள்ளாராம்.
ஆல்பம் பற்றி இயக்குனர் மகேஷ் கூறியதாவது,
“‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பத்தில் உள்ள ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகையாக இருக்கும். கருத்து எதுவும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும் இளைஞர்களைப் பற்றிய ஆல்பமாக இதை உருவாக்கியிருக்கிறோம். திரைப்படத்தில் வரும் பாடல்கள் மாதிரி இந்த ஆல்பத்தை உருவாக்கியிருப்பது தனிச் சிறப்பு. மியூஸிக் ஆல்பங்களுக்கு நல்ல வரவேற்பு உருவாகணும் என்ற எண்ணத்தில்தான் இந்த ‘ஸ்மைல் ப்ளீஸ்’ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்கிறார்.
ஸ்மைல் ப்ளீஸ் – ஆல்பம் – வீடியோ