பாண்டவர் அணியின் பலமான வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட பெரும்பாலானோர் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாத நிலையில் நேற்று சென்னை, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, விஜய், சூர்யா, சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் வந்து வாக்களித்தனர்.

நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. முதலில் செயலாளர் பதவிக்கான தேர்தலில் விஷால் வெற்றி என்ற செய்தியே வெளிவந்தது. தொடர்ந்து மற்ற பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

தலைவர் பதவிக்கு நாசர், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்டவர்கள்.

மேலும் 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்த அணியைச் சார்ந்த 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அயூப் கான், ஜுனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பூச்சி முருகன், நந்தா, பிரேம்குமார், பிரசன்னா, ராஜேஷ், ரமணா, ஸ்ரீமன், சிவகாமி, சங்கீதா, சோனியா, தளபதி தினேஷ், உதயா, விக்னேஷ், பாலதண்டபாணி, பிரகாஷ், பசுபதி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

சரத்குமார் அணி சார்பாக இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி, சிம்பு, விஜயகுமார், எஸ்எஸ்ஆர். கண்ணன் ஆகியோர் தோல்வியடைந்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இந்த அணி சார்பாக போட்டியிட்ட ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகிய நால்வர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரைவில் புதிய அணியினரின் பதவியேற்பு நடை பெற உள்ளது.

Read Previous

ரஜினி கருத்துக்கு எதிராக கமல் கருத்து…

Read Next

விஜய் டிவி – ஆயுதபூஜை, விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள்