ஸ்ரீநாகராஜா சர்ப்ப யக்ஷி பிலிம்ஸ் தயாரிப்பில் நாகமானிசி இயக்கத்தில் ராம் சரவணன், ‘ஸ்லம்டாக் மில்லியனர் ‘ புகழ் தன்வி லங்கோர் மற்றும் பலர் நடிக்கும் ‘விடாயுதம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘விடாயுதம்’.
இப்படத்தின் இசையை அபிராமி ராமநாதன். இயக்குநர் தருண் கோபி, இயக்குநர் ராஜ்கபூர் வெளியிட பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகர் பிரஜன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் நாகமானிசி, இயக்குநர்கள் ஏ.வெங்கடேசன், பாலசேகரன், ராஜ்கபூர், படத்தின் நாயகன் ராம் சரவணன்,நடிகர்கள் செந்தில், ப்ரஜின், உதயராஜ், நாயகி கமலி, தயாரிப்பாளர்கள் ஜே. கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட்பாபு, விஜயமுரளி, பெரு. துளசிபழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும் போது,
“ஜாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்படக் கலையுலகம்தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான். சினிமா உயிருடன் நன்றாக இருக்க சிறிய படங்கள் நிறைய வர வேண்டும்.
‘விடாயுதம்’ படத்தைச் சிறு முதலீட்டுப் படமாக நாகமானிசி எடுத்திருக்கிறார். ‘விடாயுதம்’ ஒரு பாம்புப்படம். நான் பாம்புப் படம் பார்க்க மாட்டேன், பயப்படுவேன். சிறு முதலீட்டுப் படங்கள் வெளியானால்தான் சினிமா நன்றாக இருக்கும்.
தியேட்டர்களில் அதிகம் வெளிவருபவை சிறு முதலீட்டுப் படங்கள்தான். அது மட்டுமல்ல சினிமாவை நம்பித்தான் டிவிக்கள் உள்ளன. டிவி க்களில் 90 சதவிகிதம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்தான் வருகின்றன. சினிமாவை நம்பி பத்து லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டுப் படங்கள் வரவேண்டும். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.
கில்டு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, ” பாம்பு வருகிற படங்கள் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ்நாடு முழுக்க வெள்ளமாக இருக்கிறது. திரைப்படத்தின் அனைத்து துறையினரும் உதவ வேண்டும். என் சார்பில் நான் ஒரு லட்சம் வழங்குகிறேன். 50 ஆண்டுகளாக சினிமா சார்ந்தவர்களே ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை திரையுலகம் மக்களுக்கு நிதி உதவி செய்யவில்லை. இனிமேலாவது திரையுலகம் ஒட்டு மொத்தமாக வந்து உதவ வேண்டும்.
நம் மக்களை நாம் காப்பாற்றாமல் நாம் உயிருடன் இருந்து என்ன பயன் ? நடிகர்கள் 25 கோடி 30 கோடி சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் வெள்ளநிவாரண நிதி தரவே மாட்டேன்கிறார்கள்,” என்றார்.
விழாவில் விழாமேடையில் நிஜமான நல்ல பாம்பு மேடை அரங்க அமைப்பில் இடம் பெற்றிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.