பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் ‘பூலோகம்’.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் கல்யாணகிருஷ்ணன். அந்தப் பழக்கத்தில் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவியும் நடிக்க சம்மதிக்க 2010ம் ஆண்டு ‘பூலோகம்’ ஆரம்பமானது.
எப்படியும் 2011லாவது படம் வந்துவிடும் வகையில்தான் படம் ஆரம்பமானது. ஆனால், தாமதம், மேலும் தாமதம் என 2013ல் வெளிவரும் என்றார்கள். அப்போதும் வரவில்லை கடைசியாக செப்டம்பர் 2014ல் வரும் என்றார்கள் அப்போதும் வரவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த ‘ஐ’ படம் வெளிவந்து வசூலைக் குவித்ததால் அடுத்த சில மாதங்களிலாவது இந்தப் படம் வரும் என்று சொல்லப்பட்டது.
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ மாபெரும் வெற்றி பெற்ற போதே ‘பூலோகம்’ விரைவில் வெளியாகிவிடும், அதற்கான வேலைகளை தயாரிப்பாளர் ஆரம்பித்துவிட்டார் என்ற தகவலும் வெளியானது. தற்போது சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு ‘பூலோகம்’ படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இன்று மாலை இப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகிறது.