ரஜினிகாந்த் நடித்து ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனையைப் புரிந்து கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் வெற்றி குறித்து ரஜினிகாந்த் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
அவர் தமிழக மக்களுக்காக எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்காவில் இரண்டு மாத காலம் இருந்தது ஏன் என்பது பற்றியும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
“என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்.
லைக்கா தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் ‘2.0’ மற்றும் நண்பர் தாணு தயாரிப்பில் பா.இரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்தில் ஒய்வில்லாமல் நடித்ததின் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஒய்வு தேவைப்பட்டது.
அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஒய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விபட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இப்படத்தை தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணுவுக்கும், எழுதி இயக்கிய பா.இரஞ்சித்துக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி”, என ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.