இன்று அறிவிக்கப்பட்ட 64வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘ஜோக்கர்’ திரைப்படம் சிறந்த மாநில மொழித் திரைப்படம் விருதையும், சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் பெற்றது.
அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று பத்திரிகையாளர்களை ‘ஜோக்கர்’ குழுவினர் சந்தித்தார்கள். இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் குரு சோமசுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது ,
“நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் போன்ற மிகச் சிறந்த நடிகர்,” என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம் பேசும் போது,
“ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு , நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார். எனக்கு அது சந்தோஷத்தைத் தந்தது. இந்தப் படத்தில் எழுத்து, இசை, தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இனைந்து மிகச் சிறப்பாக அமைந்தது. நான் இந்தப் படத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது,” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும் போது,
“ஜோக்கர் கதையைக் கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்கு அவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் , மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் ‘ ஜாஸ்மின்ன்’ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது அதன் சிறப்பாகும். சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களைக் கொண்டு வந்தார். அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார்,” என்றார்.
தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியதாவது,
“ஜோக்கர் படத்துக்குத் தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம். இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம். அவருக்கும் கிடைத்திருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும் போது ஜோக்கர் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது,” என்றார்.