பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல – வைரமுத்து

64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘தர்மதுரை’ படத்தில் இடம் பெற்ற ‘எந்தப் பக்கம்…’ பாடலுக்காக வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது.

7வது முறையாக அவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சிச் செய்தியில்,

“இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.

அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல, நான் ஒரு கருவி மட்டுமே.

‘தர்மதுரை’ படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய்சேதுபதி – தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.

இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.

தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி – மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன.

எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்.

“எந்தப்பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று – நீ
எந்தப் பாதை ஏகும் போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காதல் உண்டு – சிறு
கரப்பான் பூச்சி தலைபோனாலும்
வாழ்வதுண்டு

உன் சுவாசப் பையை மாற்று – அதில்
சுத்தக் காற்றை ஏற்று – நீ
இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்
வாழ்ந்துவிடு”

– என்று பாடுகிறாள்.

பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன் முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன நல்ல சிந்தனைக்கும் மொழி வளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.

இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ்மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்,” என வைரமுத்து கூறியுள்ளார்.

தேசிய விருது வென்ற ‘எந்தப் பக்கம்’ முழு பாடல்…

எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு
ஒரு காதல் தோல்வி காணும்போதும் காதலுண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு

அட ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சீந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் ஞானம் மீஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு

அப்பொதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமே ஏது
எப்பொதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காது
மனசை சலவை செய்ய‌
ஒரு கண்ணீர் கதி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய‌
ஒரு காதல் க‌தி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்த காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு

ஒ… ஒஒ…

சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோசமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட‌ ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே

ஒ… ஒஒ…

எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நான் எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு

நீ தாவி தாவி தழுவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வழியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

பாடலின் வீடியோ…

Read Previous

ஆக்ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

Read Next

தேசிய விருதுகள், நன்றி கூறிய ‘ஜோக்கர்’ குழுவினர்