ஆக்ஷன் நாயகியாக த்ரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கர்ஜனை’.

த்ரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளு சபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் பாலு கூறியதாவது,

‘இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையைக் கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார்.

அம்ரிஷ் இசையில் 3 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் 2 பாடல்களை கதையோடு அமைத்திருக்கிறேன்.

மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கர்ஜனை’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

Read Previous

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

Read Next

பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல – வைரமுத்து