கொஞ்சம் வசதியான படி(க்கும்)த்த பெண்ணை ஒரு சாதாரண பையன் காதலிக்கும் அதே வழக்கமான காதல் கதைதான்.
காதல் படங்களின் கதைகள் எப்படி எப்படியோ மாறி வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர்களும் புதிது புதிதாக எவ்வளவுதான் யோசித்து வித்தியாசமான கதையைக் கொடுக்க முடியும்.
காதலுக்கு அந்தஸ்து, சாதி, மதம், படிப்பு இவைதான் எதிர்ப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சாதி எதிர்ப்பாக இருக்கிறது.
பாலாஜி தண்ணீர் லாரி ஓட்டும் டிரைவர். ஒரு முறை பக்கத்து ஏரியாவுக்கு தண்ணீர் ஊற்றப் போகும் போது தீக்ஷிதாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். தீக்ஷிதாவின் குடும்பத்தாருக்குக் காதல் தெரிய வர தீக்ஷிதாவின் அரசியல்வாதி சித்தப்பா சாதியின் பெயரால் காதலை கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், தீக்ஷிதான் அண்ணன் முத்துக்குமார் காதலுக்கு ஆதரவாக இருக்கிறார். காதலர்களை தங்கள் குடும்பத்தாருக்குத் தெரியாமல் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தண்ணீர் லாரி டிரைவராக பாலாஜி. கிழிந்த லுங்கி, அழுக்கான சட்டை, தாடி என டிரைவர் தோற்றத்தை எளிதில் கொண்டு வந்து நடிக்கவும் செய்கிறார்.
தீக்ஷிதா பள்ளியில் படித்து முடித்து விட்டு, கல்லூரிக்கும் செல்கிறார். பள்ளி மாணவிகளின் காதலை இன்னும் எத்தனை படத்தில்தான் காட்டப் போகிறார்களோ தெரியவில்லை.
இருவரும் பார்த்ததும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். எந்த மோதலும் இல்லை. காதலுக்கும் பிரச்சனை கடைசியில்தான் வருகிறது. இருவருக்குமே அவர்களுடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான காட்சிகள் அதிகம் இல்லை.
யோகி பாபு, பால சரவணன் இருந்தும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு. மற்ற கதாபாத்திர நடிகர்களில், மாரிமுத்து, முத்துக்குமார், டி. ரவி ஆகியோரில் முத்துக்குமாருக்குத்தான் முக்கித்துவம் இருக்கிறது.
இது போன்ற காதல் படங்களில் பாடல்கள் மனதைக் கவர வேண்டும். அதுவே படத்தின் வெற்றிக்குப் பலமாக அமையும்.
இயக்குனர் மார்க்ஸ் நகர்வலத்திற்கு இன்னும் நல்ல பாதையைப் போட்டிருக்கலாம்.
நடிப்பு – பாலாஜி, தீக்ஷிதா, யோகி பாபு, பாலசரவணன், நமோ நாராயணன், மாரிமுத்து, முத்துக்குமார், டி. ரவி, அஞ்சாதே ஸ்ரீதர், அட்டகத்தி வேலு, ரிந்துரவி, பேபி மற்றும் பலர்.
தயாரிப்பு – எம். நடராஜன்
இயக்கம் – மார்க்ஸ்
இசை – பவன் கார்த்திக்
பாடல்கள் – மோகன் ராஜன்
ஒளிப்பதிவு – தமிழ் தென்றல்
படத் தொகுப்பு – ஜே.வி. மணிகண்ட பாலாஜி
நடனம் – கல்யாண், நந்தா
மக்கள் தொடர்பு – நிகில்
வெளியான தேதி – 21 ஏப்ரல் 2017