ஒரு நேரடி ஹிந்திப் படத்தின் வசூலை ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான ‘பாகுபலி 2’ படம் முறியடித்துள்ளது ஹிந்தித் திரையுலகினரையும், நடிகர்களையும் கண்டிப்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கம்.
ஆமீர்கான் நடித்து கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த ‘தங்கல்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்திய அளவில் ‘தங்கல்’ படம் சுமார் 385 கோடிகளை வசூலித்தது. அந்த சாதனையை நேற்றைய வசூலுடன் ‘பாகுபலி 2’ படம் முறியடித்துள்ளது. ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் நேற்று 390 கோடியைத் தாண்டியுள்ளது.
நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் 400 கோடி ரூபாயைத் தாண்டிவிடும்.
இந்திய அளவில் ஒரு படத்தின் வசூல் 400 கோடியைத் தாண்டுவது இதுவே முதல் முறை. அதுவும் தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆன ஒரு படம் அந்த சாதனையைப் புரிந்திருப்பது மிகப் பெரும் விஷயம்.
‘பாகுபலி 2’ ஹிந்தித் திரைப்படம் முதல் வாரத்தில் சுமார் 245 கோடி, இரண்டாவது வாரத்தில் 145 கோடி, என 390 கோடிகளை வசூலித்துள்ளது.
400 கோடி கிளப்பில் இணையப் போகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘பாகுபலி 2’ ஹிந்தி பெறப் போகிறது.
முதல் முறையாக 2008ம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘கஜினி’ படம் 100 கோடி வசூலித்து 100 கோடி கிளப் என்ற புதிய வசூல் சாதனையை ஆரம்பித்து வைத்தது.
அதற்கடுத்து 200 கோடி கிளப்பை ஆமீர்கான் நடித்து 2009ல் வெளிவந்த ‘3 இடியட்ஸ்’ படம் ஆரம்பித்து வைத்தது. 300 கோடி கிளப்பை ஆமீர்கான் நடித்து 2014ல் வெளிவந்த ‘பிகே’ படம் ஆரம்பித்து வைத்தது. 300 கோடி கிளப்பில் அதிகபட்சமாக 385 கோடி வசூலித்து ஆமீர்கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ படம் தக்க வைத்துக் கொண்டிருந்தது.
இப்போது 300 கோடி கிளப்பையும் தாண்டி புதிதாக 400 கோடி கிளப் உருவாகி அதில் ‘பாகுபலி 2’ முதல் முறை நுழைகிறது.
இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், இசையமைப்பாளர் மரகதமணி என அனைவரும் இனி 400 கோடி பெருமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே, உலக அளவில் 1000 கோடியைக் கடந்து 1500 கோடியை நோக்கி ‘பாகுபலி 2’ வசூல் போய்க் கொண்டிருக்கிறது.