தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்ப விழா அடுத்த வாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெ உள்ளது.
சுந்தர் .சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க உள்ள இந்தப் படம் சரித்திரப் படமாக உருவாக உள்ளது.
படத்தின் கதையைக் கேட்டதுமே இசையமைக்க சம்மதித்த ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு மிகப் பெரும் பலமாகக் கருதப்படுகிறார். உலக அளவில் ‘சங்கமித்ரா’ படம் இதன் மூலம் மேலும் போய்ச் சேரும்.
அடுத்த வாரம்தான் இப்படத்தின் ஆரம்ப விழா நடைபெற உள்ளது. அதற்குள் படத்தின் கதையைக் கேட்ட பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சி. கல்யாண், ‘சங்கமித்ரா’ படத்தின் தெலுங்கு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டார் என தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் கதை, உலக அளவில் அனைத்து ரசிகர்களையும் சென்று சேரும் அளவில் உள்ளது என படத்தை வாங்கிய கல்யாண் கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஸ்ருதிஹாசன் வாள் வீச்சு, சண்டை ஆகியவற்றில் கடந்த ஒரு மாத காலமாக பயிற்சி எடுத்து வருகிறார்.
அடுத்த மாதம் முதல் ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது.