பாஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்கும் ‘ நிபுணன்’ படம் நடிகர் அர்ஜுனின் 150வது படமாக வெளிவர இருக்கிறது.
இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினிகாந்த், படம் நிச்சயம் வெற்றி பெறும் என படக்குழுவினரை வாழ்த்தினார்.
‘அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தைத் தயாரித்து இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 150 படங்களைக் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன். அவரது சாதனையைக் கொண்டாடும் விதமாக ‘நிபுணன்’ படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம்.
ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரையுலகக் கலைஞர்கள் வைத்திருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது. நாங்கள் அணுகிய திரை உலகக் கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறச் சென்றோம். அப்போது அவர் ‘நிபுணன்’ படத்தின் டீசரைப் பார்த்தார். மிக மிக உற்சாகமாக எங்களைப் பாராட்டினார். ‘This is sure shot winner’ என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் போது நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார்.
அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்து போனோம். நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பைக் கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன்,” என்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.