சிறிய படங்களுக்காக சட்டம் போட வேண்டும் – பாக்யராஜ்

ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் ‘சதுரஅடி 3500’.

அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நாயகன் நிகில் மோகன், நடிகை மேக்னா முகேஷ், இயக்குநர் ஜாய்சன், ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ், எடிட்டர் ஆனந்த், தயாரிப்பாளர் ஜே எஸ் கே கோபி, படத்தின் விநியோகஸ்தர் ராகுல், கலைப்புலி எஸ் தாணு, கே பாக்யராஜ், கவிஞர் பிறைசூடன், இயக்குநரும் நடிகருமான ஈ ராம்தாஸ், தயாரிப்பாளரும் நடிகருமான கே ராஜன், இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர், நடிகரும், வழக்கறிஞருமான சங்கர் கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் சுபாஷ், இயக்குநர் ஷர்மா, இயக்குநர் மோகன், கவிஞர் சொற்கோ, நடிகர் அபி சரவணன், நடிகர் வெங்கட் சுபா உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

இயக்குநர் கே பாக்யராஜ் நிகழ்ச்சியில் பேசுகையில்,

‘இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். சதுர அடி 3500 படத்தின் இசை வெளியீட்டு விழா மகிழ்ச்சியாகத் தொடங்கி, விவாத மேடையாக மாறிவிட்டது.

நடிகை இனியா இப்படவிழாவிற்கு வராதது குறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால், அவர் வராததால் நஷ்டம் அவருக்குதானே தவிர படக்குழுவிற்கு இல்லை.

‘சுவர் இல்லாத சித்திரங்கள் ’ படத்தில் ‘கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..’ என்று எழுதியிருப்பேன். அவர்களுக்குத்தான் இங்கு வரவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன்.

எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே ?.

ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக்கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்தப் படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணம் காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கி விடுகிறார்கள்.

படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கி விட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும் ? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படம் தியேட்டரில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வர வேண்டும்.

இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்குப் பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்த கட்சிகாரர்களே ஒட்டுபோடுவார்களா ? மாட்டார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்து கொண்டேயிருக்கிறது. இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சதுர அடி 3500 படம் வெளியாவது விசேசம்.

படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையை பெற்றுத்தருவார். அறிமுக நாயகன் நிகில் சுதந்திரமாக அனுபவித்து நடித்திருக்கிறார். நன்றாக இருக்கிறது படம் வெற்றிப் பெறும் ’ என்றார்.

முன்னதாக விழாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் பார்த்திபன் மகளுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான நிதி உதவியை அபி சரவணன், கே பாக்யராஜ் முன்னிலையில் வழங்கினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே கோபி நன்றி தெரிவித்தார்.

Read Previous

‘நிபுணன்’ வழக்கமான த்ரில்லர் படம் அல்ல – அர்ஜுன்

Read Next

‘நிபுணன்’ மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் – பிரசன்னா