‘நிபுணன்’ வழக்கமான த்ரில்லர் படம் அல்ல – அர்ஜுன்

தமிழ்த் திரையுலகத்தில் ஆக்ஷன் கிங் என அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் 28ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் காவல் துறை அதிகாரியாக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் அர்ஜுன் முக்கியமானவர்.

சினிமா துறைக்கு நடிக்க வந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்றும் அதே துள்ளலோடும், ஸ்டைலுடனும், பொறாமைப்பட வைக்கும் உடற்கட்டோடும் இருந்து வருகிறார்.

நிபுணன் படம் பற்றி அர்ஜுன் கூறுகையில்,

”எனது சினிமா வாழ்க்கையில் பல தடைகளைச் சந்தித்து வெற்றிகளை கண்டவன் நான். இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து ‘நிபுணன்’ மிகவும் வித்தியாசமானது. அதன் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமானது. இது ஒரு சராசரி போலீஸ் திரில்லர் கிடையாது. முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் இக்கதை கூறப்பட்டுள்ளது.

புலனாய்வு துறை DSPயாக இதில் நடித்துள்ளேன். உடலிலும் அறிவிலும் பலம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்திற்கு எல்லோரைப் போலவும் தனக்கென ஓர் பலவீனமும் இருப்பது ஒரு சுவாரசியம். தனது தனிப்பட்ட வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையும் எவ்வாறு சமநிலை செய்கிறார் இந்த போலீஸ் அதிகாரி என்பதை படம் பார்க்கும் எல்லோரும் தங்கள் வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வகையில் மிகத் திறமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் அருண் வைத்தியநாதனுடன் பணி புரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குக்கு முழுமையாக தயார் நிலையில் மட்டுமே வருவார். எங்கள் ‘நிபுணன்’ குழுவின் ஒவ்வொருத்தரின் அர்ப்பணிப்பால் இப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

ஜூலை 28 முதல் மக்களும் எங்கள் ‘நிபுணன்’ படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன், வைபவ், ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். எங்கள் அணியின் கடுமையான உழைப்பினால் வெற்றியின் வாசலை வந்தடைந்துவிட்டோம் என நம்புகிறேன்,” என்கிறார் அர்ஜுன்.

Read Previous

‘ஸ்பைடர்’ தமிழ் உரிமை விலை என்ன ?

Read Next

சிறிய படங்களுக்காக சட்டம் போட வேண்டும் – பாக்யராஜ்