சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையாக, விக்ராந்தின் காதலியாக நடித்திருப்பவர் ஷாதிகா.
சென்னைப் பெண்ணான இவர், லயோலாவில் பி.டெக் படித்து முடித்தவர்.
இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர். அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தானாம். அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ‘ரோஜாவனம் படத்தில் குட்டி லைலா, ‘குபேரன்’ படத்தில் கெளசல்யாவின் மகள் , ‘சமஸ்தானம்’ படத்தில் சரத்தின் மகள் , ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள் , ‘ஆனந்தம்’ படத்தில் முரளியின் மகள் , என்று வளர்ந்து ‘குருவி’யில் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று சிறுவயதிலேயே 30 படங்களில் நடித்தவர்.
அது மட்டுமல்ல ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள் .’ கோலங்கள் ‘தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று டிவியிலும் நடித்ள்ளார். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம் பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போன ஒரே தமிழ்க் குறும்படம் ஆகும்.
நடிகை ரேவதி இயக்கிய குறும் படமான ‘கயல்விழி’யில் ஷாதிகா தான் கயல்விழி. இப்படி இவரது நடிப்பு அனுபவம் நீளமானது.
சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம்.
இப்பட அனுபவம் பற்றிக் கூறும் போது
“சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக், பெரிய அடையாளம். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.
சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம். கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். படப்பிடிப்பில் தான் தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம். அதற்காகத் தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.
கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான் ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை, ‘மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார். அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக இது தமிழ் , தெலுங்கில் உருவான படம்.
நான் நாயகி, குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி, திருப்தி. ஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன்.
ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன். நான் குழந்தையாக நடித்தது முதல் இன்று வரை என்னைத் தேடி வந்து அமைந்த வாய்ப்புகள்தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன. அதனால் என் தேடலின் போதே எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும் வரும் என்று நம்புகிறேன். எனக்கான காலம் வரும் என்று கருதுகிறேன்,” என்கிறார்.
தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த ஒருவராக இருக்கிறார் ஷாதிகா.
இப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.