இயக்கம் – S. பரீத்
இசை – S.N. அருணகிரி
நடிப்பு – இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், ப்ரீத்திஷா, ஷைனி, ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி மற்றும் பலர்.
வெளியான தேதி – 24 நவம்பர் 2017
ஒரு படத்தில் ஒரு நாயகன், நாயகி ஆகியோரைச் சுற்றியே பொதுவாகக் கதையை அமைப்பார்கள். இந்த ‘வீரையன்’ படத்தில் நாயகன், நாயகி என இல்லாமல் சில கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கி படத்தை எடுத்திருக்கிறார்கள்.
1989ம் ஆண்டு தஞ்சாவூரில் நடக்கும் கதை. சில கதாபாத்திரங்களின் பிரச்சனைகளும், சம்பவங்களும் எப்படி ஒன்றிணைகின்றன என்பதுதான் படத்தின் முழு கதை.
கதை 1
இனிகோ பிரபாகர், கயல் வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திஷா மூவரும் வெட்டித்தனமாக ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். அனாதைகளான அவர்கள் சிறிய திருட்டுக்களை செய்து கொண்டு ஒன்றாகவே வசித்து வருகிறார்கள்.
கதை 2
தம்பிகளை வளர்த்து ஆளாக்கி அவர்களால் அவமானப்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளியான ஆடுகளம் நரேன், அவர் மகன் நன்றாகப் படித்து மார்க் வாங்குவான் என தம்பிகளிடம் சபதம் போடுகிறார். ஆனால், நரேனின் மகன் சம்பந்தமேயில்லாமல் ஒரு பிரச்சனையில் சிக்கி பள்ளியை விட்டு துரத்தப்படுகிறான்.
கதை 3
பள்ளியில் படிக்கும் கவுன்சிலர் வேலராமமூர்த்தியின் மகள், அவர்கள் வீட்டு டிரைவரைக் காதலித்து ஊரை விட்டு ஓட திட்டம் போடுகிறாள். இது வேலராமமூர்த்திக்குத் தெரிந்துவிடுகிறது.
கதை 4
யாரும் இல்லாமல் தனியாக இருக்கும் ஷைனி, திடீரென இனிகோ பிரபாகர் மீது காதல் கொள்கிறாள்.
இந்த நான்கு கதைகளும் எப்படி ஒன்று சேர்கின்றன என்பதுதான் படத்தின் கதை.
இயல்பாக நடிக்கத் தெரிந்த இனிகோ பிரபாகருக்கு இன்னும் சரியான படம் சிக்கவில்லை. அப்படி ஒரு படம் அமைந்துவிட்டால் யதார்த்தமாக நடிக்கும் வெற்றி நடிகர்களின் வரிசையில் அவரும் இடம் பிடித்துவிடலாம். இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார். அவர் கூட்டாளிகளாக நடித்திருக்கும் கயல் வின்சென்ட் இயல்பாக நடித்திருந்தாலும், ப்ரீத்திஷா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார்.
ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி, நரேனின் மகனாக நடித்திருப்பவர், வேலராமமூர்த்தியின் மகள் யாருமே நடிப்பில் குறை வைக்கவில்லை. படிப்பின் அவசியத்தை உணர்த்தியதற்காக இயக்குனர் பரீத்தைப் பாராட்ட வேண்டும்.
படத்தில் உள்ள காட்சிகள் சட்டென்று முடியவில்லை, ஆரம்பத்தில் சில காட்சிகள் மிக நீளமாக அமைந்திருப்பது படத்தின் குறை. இன்னும் கொஞ்சம் ‘டிஸ்கஷன்’ செய்து உழைத்திருந்தால் ‘வீரையன்’ , வெற்றியாளன் ஆகியிருப்பான்.