இயக்கம் – கலாபிரபு
இசை – கேபி
நடிப்பு – கௌதம் கார்த்திக், சோனாரிகா படோரியா, அர்ஷிதா ஷெட்டி, சச்சின் கடேகர், சுதன்ஷு பான்டே மற்றும் பலர்
வெளியான தேதி – 24 நவம்பர் 2017
தமிழ் சினிமாவில் ‘ஃபேன்டஸி’ என அழைக்கப்படும் அதீத கற்பனை கொண்ட படங்கள் அதிகம் வருவதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் பொழுது போக்குப் படம்தான் இந்த ‘இந்திரஜித்’.
ஃபேன்டஸி கதை என்பதே கற்பனைக்கு மீறியதுதான், அதற்கேற்றபடி சினிமாத்தனத்தையும் மீறிய பல கற்பனைக் காட்சிகள் படத்தில் அமைந்து ஆச்சரியப்படவும் வைக்கின்றன, அதிர்ச்சியடையுவும் வைக்கின்றன.
இயக்குனர் கலாபிரபு ஒரு சுவாரசியமான கதையை உருவாக்கியிருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து பூமிக்கு வந்து விழுந்த ஒரு அதிசய கல்லில் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தக் கூடிய சக்தி இருக்கிறது என்பதை கோவா தொல்லியல் துறையிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட சச்சின் கன்டேகருக்குத் தெரிய வருகிறது. அந்தக் கல் எங்கிருக்கிறது என்பதை அவருடைய குழுவினர் தேட முயல்கிறார்கள். அந்தக் குழுவில் படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக் இணைந்த பிறகுதான் கல் இருக்கும் இடத்திற்கான ஆதாரம் அவர் உதவியால் கிடைக்கிறது. அதே சமயம், கோவா தொல்லியல் துறையின் தற்போதைய தலைவரான சுதன்ஷு பான்டேவும் அந்தக் கல்லை கைப்பற்ற முனைகிறார். யார் அந்த அதிசய கல்லை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் பல சாகசங்களைப் புரியும் சாகச நாயகனாக நடித்திருக்கிறார் கௌதம் கார்த்திக். இதெல்லாம் நடக்குமா, ஒருவரால் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும் என எந்தக் கேள்விகளையும் கேட்காமல் இருந்தால் இது சரியான ‘அட்வென்ச்சர்’ படம். அப்பா கார்த்திக்கைப் போலவே மிகவும் துள்ளலுடன் நடித்திருக்கிறார் கௌதம். ஆக்ஷன் காட்சிகளையும் சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார். அடுத்த சில படங்களில் ஆக்ஷனுக்கு மாறுவதற்கான அச்சாரத்தை இந்த இந்திரஜித் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள், சோனாரிகா படோரியா, அர்ஷிதா ஷெட்டி. இருவருக்குமே படத்தில் அதிக காட்சிகளும் இல்லை, அதிக முக்கியத்துவமும் இல்லை.
கோவா தொல்லியல் துறையின் முன்னாள் தலைவராக சச்சின் கடேகர், தற்போதைய தலைவராக சுதன்ஷு பான்டே. கோவாவில் நடக்கும் கதை என்பதால் இருவருமே அந்தக் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். இருவரையுமே வில்லன் என்றும் சொல்ல முடியாது. ஆனால், கடைசியில் ஒருவர் மட்டும் வில்லனாக்கப்படுகிறார்.
படத்தில் நகைச்சுவை வேண்டும் என்பதற்காக எம்.எஸ். பாஸ்கரை சேர்த்திருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும்.
இடைவேளை வரை கோவாவில் படம் பரபரப்பாக நகர்கிறது. அதிசய கல் பற்றிய விளக்கம், அதற்கான ஆதாரத்தை ஒரு வரைபடமாக எழுதி வைத்திருப்பது என திரையில் அதற்கான காட்சியமைப்புகள் இனிமை. இடைவேளைக்குப் பின் அருணாச்சல பிரதேசத்தை நோக்கி கதை நகர்கிறது. விஷுவலாக அந்தக் காட்சிகளை பிரமிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு ஒளிப்பதிவாளர் ராசாமதி அற்புதமாக உழைத்திருக்கிறார்.
தீவிரவாதம், அவர்களுக்குள் இரு பிரிவுகள் அவர்களிடம் சிக்குவது என இல்லாமல் அந்தக் காட்சிகள் வேறு விதமாக இருந்திருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.
அறிமுக இசையமைப்பாளர் கேபி பின்னணி இசையில் பக்கபலமாய் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் வரும் ‘என்னென்ன காட்சிகள்…’ பாடல் ஹிட் பாடலில் சேரும்.
குழந்தைகளுடன், ஜாலியாக இரண்டு மணி நேரத்தை செலவிட வேண்டும் என நினைப்பவர்கள் ‘இந்திரஜித்’தைப் பார்க்கலாம், ஏமாற்ற மாட்டார்.