நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற நடிகர் சார்லி, சமீப காலமாக சிறந்த கதாபாத்திரங்களில் உணர்வுபூர்வமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
அப்படிப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில்தான் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.
படம் பற்றியும், அவருடைய கதாபாத்திரம் பற்றியும் சார்லி கூறியதாவது,
”வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில், குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் ‘வேலைக்காரன்’ படத்தில் எங்கள் மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதரவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.
இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப் பெரிய தொழில் வித்தகர்கள் என்று தான் கூறவேண்டும்” என்கிறார் நடிகர் சார்லி.
‘வேலைக்காரன்’ டிசம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.