மலையாளத்தில் நல்ல வரவேற்பையும், வசூலையும், தேசிய விருதையும் பெற்ற ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘நிமிர்’.
வேற்று மொழிப் படங்களை தமிழில் ரீமேக் செய்யும் போது தமிழ் வாசம் வீசும்படி இருந்தால்தான் தமிழ் ரசிகர்களையும் கவர முடியும். அனுபவ இயக்குனரான பிரியதர்ஷன் ரீமேக் செய்துள்ள இந்தப் படத்தில் மலையாள வாசம்தான் அதிகம் வீசுகிறது.
போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலினை, ஒரு தகராறில் சமுத்திரக்கனி அடித்து விடுகிறார். அவரை பதிலுக்கு திருப்பி அடிக்க முடியாமல் அடி வாங்கும் உதயநிதி, பதிலுக்கு எப்போது சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கிறேனோ அப்போதுதான் மீண்டும் செருப்பு அணிவேன் என சபதம் எடுக்கிறார். அந்த சபதத்தை அவர்நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கிராமத்து இளைஞராக அப்படியே வாழ்ந்திருக்கிறார் உதயநிதி. இதற்கு முன் அவர் நடித்த படங்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு என்றைக்கும் பேசப்படும்.
உதயநிதியின் சிறு வயது காதலியாக வந்து பின்னர் முன்னாள் காதலியாகிவிடுகிறார் பார்வதி நாயர். முதல் பாதி வரை வந்தாலும் சிரித்துப் பேசி, பார்த்து நம்மைக் கவர்கிறார். உதயநிதியின் அடுத்த காதலியாக நமீதா பிரமோத். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்றாலும் அவரது கதாபாத்திரம் அதை மறக்கச் செய்துவிடுகிறது. பல காட்சிகளில் கண்காளல் பேசி கவர்கிறார்.
படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் உதயநிதியின் அப்பா மகேந்திரன் அவ்வளவு பொறுமைசாலியான அப்பாவாக இயல்பாய் இருக்கிறார். பக்கத்து கடை மாமாவாக எம்.எஸ்.பாஸ்கர், எந்தக் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். கருணாகரன் இருக்கிறார் ஆனால், காமெடி துளியும் இல்லை. சமுத்திரக்கனி வருகிறார், அடிக்கிறார், அப்புறம் போய் விடுகிறார். மீண்டும் வந்து படத்தை முடித்து வைக்கிறார்.
படத்தில் உள்ள பல காட்சிகள் மிக மிக யதார்த்தமாய் அமைந்துள்ளன. இருந்தாலும் உணர்வு பூர்வமாக நம்மை இழுத்துக் கொள்ளாத கதையால் அந்தக் காட்சிகள் அமைந்தும் விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிடுகிறது.
அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், “நெஞ்சில் மழை…., எப்போதும் உன் மேல்….” இரண்டு பாடல்கள் மெலடியில் ரசிக்க வைக்கின்றன. தர்புகா சிவா இசையமைப்பில் ‘பூவுக்கு தாப்பாள்…’ பாடலும் ரசிக்க வைக்கிறது.
நெல்லைச் சீமையின் அழகை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.
ரசனையான படமாகத் தெரிந்தாலும், நெஞ்சை உருக்காத ‘நிமிர்’.