ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு

‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘பரிபாடி’. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், சுமார் 100 புதிய முகங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் அறிமுகமாகின்றனர். திரிசூர் பின்னணியில், குறிப்பாக சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக, புதிய நடிகர்கள் நான்கு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளனர்.

படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் மூலம் அவர் மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, மனு ஆண்டனி படத்தொகுப்பையும், அஜயன் அதத் ஒலி வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பனி’ படத்தைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. ‘மாலிகாபுறம்’, ‘2018’, ‘ரேகாசித்திரம்’, ‘ஆடு 3’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது.

‘பரிபாடி’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read Previous

குட் நியூஸ் – படப்பிடிப்பு நிறைவு