சுந்தர் .சி இயக்கும் காமெடிப் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அவருடைய முதல் படமான ‘முறை மாமன்’ படத்திலிருந்து இன்று வரை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவரும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப படங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறார்.
‘சங்கமித்ரா’ படத்தை எடுக்க கொஞ்சம் தாமதம் ஆனதால், அந்த இடைவெளியில் இந்த ‘கலகலப்பு 2’ படத்தை எடுத்து முடித்து வெளியிட்டும் விட்டார். வழக்கமான அதே சுந்தர் .சி பிரான்ட் படம்தான் இந்த ‘கலகலப்பு 2’.
சென்னை, காசி, காரைக்குடி, மீண்டும் காசி என மாறி மாறி சுற்றி வந்து முடிகிறது கதை. தங்களது பரம்பரை சொத்தைத் தேடி காசிக்குச் செல்கிறார் ஜெய். அங்கு நிக்கி கல்ரானியைக் காதலிக்கிறார். ஆனால், நிக்கிக்கும் வேறு ஒருவருக்கும் காரைக்குடியில் திருமணம் நடத்த ஏற்பாடு ஆகிறது. காசியில் ஜெய்யின் சொத்தை அனுபவித்து வரும் ஜீவாவும், ஜெய்யும் நண்பர்கள் ஆகிறார்கள். இருவருமே நிக்கிக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை சிவா-வால் ஏமாற்றப்பட்டவர்கள். அதனால் இருவரும் சிவாவைப் பிடித்து அவர்களது பணத்தை வாங்க காசியை விட்டு காரைக்குடி செல்கிறார்கள். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இரண்டாம் பாகத்தில் புது காதல் ஜோடிகள், முதல் பாகத்தில் நாயகனாக இருந்த சிவா இந்தப் படத்தில் மூன்றாவது நாயகன். காதல் ஜோடிகளாக ஜெய், நிக்கி கல்ரானி மற்றும் ஜீவா, கேத்தரின் தெரேசா. இவர்களில் ஜீவா, கேத்தரின் காதலில் இளமை துள்ளுகிறது. கேத்தரினிடம் கிளாமர் அதிகமாக இருக்கிறது. இவர்கள் காதல் முன்னால், ஜெய், நிக்கி காதல் கொஞ்சம் பின்னாடிதான் போய்விடுகிறது.
இடைவேளைக்குப் பின் வருகிறார் சிவா. வழக்கம் போலவே டயலாக் காமெடியில் தெறிக்க விடுகிறார். ஆனாலும், சில காட்சிகளில் அவர் பேசும் வசனம் வேகத்தாலும், உச்சரிப்பாலும் புரியவில்லை.
சதீஷ், யோகி பாபு, சிங்கமுத்து, மனோபாலா, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் என இன்றைய காமெடி நடிகர்கள் அனைவருமே படத்தில் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரையும் ஓவர் டேக் செய்துவிடுகிறார் யோகி பாபு. அவர் வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.
சுந்தர் .சியின் படங்களில் இருக்கும் ‘சேசிங்’ காட்சி இந்தப் படத்திலும் இருக்கிறது. லாப் டாப், வைரங்கள் அடங்கிய யானைத் தந்தம் இரண்டையும் தேடித் தேடி ஆளாளுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். அதில் காமெடி, சண்டை என எப்படித்தான் திரைக்கதையை சுவாரசியமாக அமைக்கிறாரோ சுந்தர் .சி.
ஹிப் ஹாப் தமிழா இசையில் வழக்கம் போல துள்ளல் இசை. யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் காசியும், கிளாமரும் இரண்டு கண்களாகத் தெரிகின்றன.
சுந்தர் .சி படங்களில் ‘நோ லாஜிக், ஒன்லி மேஜிக்’ என்பது இந்தப் படத்திலும் தொடர்கிறது.
இரண்டாம் பாகத்தில் ‘டபுள்’ கலகலப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தது கொஞ்சம் ஏமாற்றம்தான், ஆனால், ‘கலகலப்பு’க்கும் பஞ்சமில்லை.