மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரித்து இயக்கும் படம் ‘பூமராங்’.
இந்தப் படத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்.ஜே. பாலாஜி, சுஹாசினி, உபென் பட்டேல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார்.
அது பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது,
“இந்தக் கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே மேக்கப் துறையில் வல்லுனர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசாவை அணுகினோம். “பத்மாவத், மாம், 102 நாட் அவுட்” ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ் பெற்றவர்கள் ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா. படத்திற்குத் தேவையான தோற்றங்களை இறுதி செய்ய மும்பைக்கு சென்றோம்.
அதர்வாவின் பிஸியான ஷூட்டிங்கினால் அவர்களை இங்கு வரவழைக்க வேண்டி இருந்தது. சென்னையில் இரண்டு நாட்கள் தங்கி 12 மணி நேரம் உழைத்து எங்களுக்குத் தேவையான தோற்றத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள்.
அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்றனர். ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது, அதன் பிறகு தான் தொடர் படப்பிடிப்புக்கு செல்ல முடியும். அதர்வா இந்த செயல்களின் நடுவே சில நேரங்களில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி விஷயங்களை முதன்முறையாக செய்வதால் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்,” என்கிறார் கண்ணன்.