இமான் – யுகபாரதி கூட்டணி தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி கூட்டணியாக விளங்கி வருகிறது. இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், பொன்ராம், இமான், யுகபாரதி கூட்டணி ஏற்கெனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்’ படங்களில் இணைந்து அனைத்துப் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாகக் கொடுத்தது. இப்போது ‘சீமராஜா’ படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கியுள்ளது.
‘சீமராஜா’ அனுபவம் பற்றி யுகபாரதி நம்மிடம் கூறியதாவது,
“இந்தக் குழுவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளதால்தான் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் பாடல்கள் அமையகிறது என்பேன். சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் டி இமான் உடனான என் பயணம் சீமராஜாவில் என் வேலையை மேலும் எளிதாக்கியிருக்கிறது.
நாங்கள் எல்லோரும் இந்தப் படத்தில் ஒன்றாக ஒப்பந்தமான உடனே எங்கள் உடலில் திருவிழா அதிர்வு பரவியது. மேலும், சிவகார்த்திகேயனுடன் பழகிய பிறகு, அவரது இமேஜுக்கு ஏற்றவாறு வரிகளை சேர்ப்பதில் அது எனக்கு நிறைய உதவியது.
சீமராஜா ஆல்பம் வேடிக்கை, கொண்டாட்டம், உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி மக்களை சிறப்பாகச் சென்றடைந்திருக்கிறது. இதற்கு பாடல் வரிகள் மட்டும் காரணமல்ல, ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் இமான் சார் கொடுத்த இசையும் காரணம்.
பாலசுப்ரமணியம் சாரின் வண்ணமயமான ஒளிப்பதிவும், நடன இயக்குனர்களின் உழைப்பும் கூடுதலாக கவர்ந்திருக்கிறது,” என்கிறார் யுகபாரதி.