தில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களும், நகைச்சுவைக் காட்சிகளும் நிறையக் குறைந்துவிட்டது என்று வருத்தப்படும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘தில்லுக்கு துட்டு 2’.

இப்படி சிரித்து எவ்வளவு நாளாயிற்று என்று படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய சந்தானத்தைப் பார்ப்பது எவ்வளவு ஆறுதல்.

சந்தானத்தின் காமெடி சரவெடி ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வசனம் வரை சந்தானத்தின் காமெடி சரக்கு நமக்கு நிச்சயம் போதையை ஏற்படுத்தும். படத்தில் அடிக்கடி சந்தானம் சரக்கடித்துக் கொண்டிருந்தாலும் காமெடி சரக்கில் அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. குடிக்கும் காட்சிகளை படங்களில் குறைத்துக் கொள்வது அனைவருக்கும் நல்லது.

இயக்குனர் ராம்பாலா ‘தில்லுக்கு துட்டு’ படத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் கூடுதலாக நகைச்சுவைக் காட்சிகளை வைத்திருக்கிறார். சில படங்களைப் பார்க்கும் போது எப்போது முடியும் என்று இருக்கும். ஆனால், இந்தப் படம் முடியும் போது, அடடா..அதற்குள் முடித்துவிட்டார்களே, இன்னும் கொஞ்ச நேரம் சிரிக்க வைத்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது. அது இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.

தான் நாயகனாக நடிப்பதற்குரிய இப்படிப்பட்டக் கதைகளைத் தேடிப் பிடித்து நடிப்பதுதான் சந்தானத்திற்கு சிறப்பு. மற்ற படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தப் படத்தை ஆரம்பித்து சீக்கிரமே முடித்து வெளியிட்டு இந்தப் புது வருடத்தில் புது வெற்றியுடன் ஆரம்பித்துவிட்டார். வருடத்திற்கு இப்படி மூன்று படங்களிலாவது நடித்து மக்களை மகிழ்ச்சியடைய வையுங்கள் சந்தானம், புண்ணியமாப் போகும்.

நாயகியாக ஷ்ரிதா சிவதாஸ். கேரள தேசத்துப் பெண்கள் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு ஒரு கிறக்கம் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்தப் படத்திலும் சிரித்த முகத்துடன், குடும்பக் குத்து விளக்காக நம்மைக் கவர்கிறார் ஷ்ரிதா.

ஷ்ரிதா சந்தானத்தின் காதல் ஜோடி என்றால், நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி ஜோடியாக கலக்குகிறார். இரண்டு பேரும் படம் முழுவதும் இணை பிரியாமல் இருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் ஜோடி போல இந்த சந்தானம், ராஜேந்திரன் காமெடி ஜோடி கலக்குகிறது.

ஊர்வசி, பிபின், சிவசங்கர், டி.எம். கார்த்திக், பிரசாந்த் ராஜ் ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து கூடுதல் சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

ஷபிர் இசையில் ‘மவனே யாரு கிட்ட’ லோக்கல் பாடலாகவும், ’காத்தாடி போல’ பாடல் மெலடியாகவும் ஒலிக்கிறது.

பேய்ப் படம் என்பதால் எந்த லாஜிக்கையும் பார்க்கத் தேவையில்லை. காமெடிப் படமாக இருந்தாலும் ஏமாற்றும் சாமியார்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது படம்.

இரண்டு மணி நேரம் சிரித்து ரசிக்க வேண்டும் என்றால் துட்டு செலவாகிறது என்று பார்க்காமல் ‘தில்லுக்கு துட்டு 2’ போகலாம். தியேட்டரில் சிரித்து விட்டு வந்தால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

Read Previous

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்

Read Next

யு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’

Most Popular