நெடுநல்வாடை – நண்பனுக்காக தயாரிப்பாளர்கள் ஆன 50 பேர்

பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் செல்வகண்ணன் இயக்கத்தில், பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நெடுநல்வாடை’.

இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இப்படத்தை வெளியிட உதவும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதன், இணை தயாரிப்பாளர் ஜேம்ஸ் மற்றும் இயக்குனர் செல்வகண்ணனுக்காக படத்தைத் தயாரித்த 50 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றாகப் படித்த நண்பன் செல்வகண்ணன் இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக அவருடைய 50 நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலீடு செய்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

50 தயாரிப்பாளர்களின் சார்பில் பேசிய ஒரு தயாரிப்பாளர் சுந்தர், தன் யதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.

‘‘படம் எடுக்க முன்வந்தபோது நாங்கள் நினைத்த பட்ஜெட்டை விட பல மடங்கு தாண்டிவிட்டது. ஆனாலும், நண்பர் செல்வகண்ணன் எவ்வளவு நேர்மையானவர் என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து செலவு செய்து இப்படத்தை முடித்தோம். இப்போதும் கூட இந்தப் படத்திலிருந்து ஒரு பைசா கூட திரும்பி வராவிட்டாலும் இயக்குநர் மீது எங்களுக்கு இருக்கும் ப்ரியங்களும் நட்பும் அப்படியே இருக்கும்,’’ என்றார்.

அதோடு இப்படத்தில் நாயகியாக முதலில் நடித்த நடிகை அதிதி மேனன் அவருடைய காதலர் நடிகர் அபி சரவணன் உடன் ஓடிப்போனது குறித்த சர்ச்சைகளை மேடையில் வெளிப்படையாகப் பேசினார்.

படத்தின் இயக்குனர் செல்வகண்ணன் பேசுகையில்,

“இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆன நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆகிவிட்டார்கள். ஆன பிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்.

இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆகவேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கொண்டே இருந்தேன். அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி படத்தை முடிக்க உதவினார்கள்.

நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். ‘நெடுநல்வாடை’ லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம்,” என்றார்.

இப் படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்துள்ள இயக்குனர் ஐந்துகோவிலான் பேசும் போது

“ஒரு தயாரிப்பாளருக்கு படம் இயக்கும்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விடுகிற இந்தக் காலத்தில் 50 தயாரிப்பாளர்களுடன் இணைந்து எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருப்பதே மிகப்பெரிய சாதனை,’’ என்றார்.

எஸ்கேப் ஆர்டிஸ்டின் தயாரிப்பாளர் மதன் பேசுகையில்

“இன்றைய தேதியில் நண்பர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினைகளையும் மீறி மிகவும் தரமான படமாக ‘நெடுநல்வாடை’யை செல்வகண்ணன் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அந்த 50 நண்பர்களுக்கும் கண்ணன் வாழ்நாள் முழுக்கக் கடன்பட்டிருக்கிறார்,’’ என்றார்.

நிகழ்ச்சியில் இப்படம் பற்றியும், பாடல்கள் பற்றியும், இயக்குனரின் தமிழார்வம் பற்றியும் வைரமுத்து பேசிய வீடியோ திரையிடப்பட்டது.

Read Previous

Nedunalvaadai – Official Trailer

Read Next

நயன்தாராவைத் தொடர்ந்து ஹன்சிகா