தனுஷ், விஜய் சேதுபதி படங்களுக்கு இடைக்காலத் தடை

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கும், விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படத்திற்கும் எதிராக ‘பாகுபலி’ தயாரிப்பாளர்கள் இடைக்காலத் தடை உத்தரவு வாங்கியுள்ளனர்.

‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் கே புரொடக்ஷன்ஸ் என்று நிறுவனம் வெளியிட்டது. அந்தப் படத்தின் உரிமையை வாங்கியதில் பாகுபலி தயாரிப்பாளர்களான அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 17.6 கோடி ரூபாயை இன்னும் வழங்க வேண்டி உள்ளது.

அதைத் தராத காரணத்தால் பாகுபலி தயாரிப்பாளர்கள், கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். 17.6 கோடி ரூபாய்க்கு உரிய செக்யூரிட்டியை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, சிந்துபாத்’ ஆகிய படங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இந்த மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘சிந்துபாத்’ படமும் இந்த மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

இப்போது இரண்டு படங்களும் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read Previous

டிவி ரேட்டிங்கில் ‘விஸ்வாசம்’ புதிய சாதனை

Read Next

7 (Seven) – Tamil Trailer