ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன்,
“மிஸ்டர் லோக்கல் மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது.
நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார்.
இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது,” என்றார் சிவகார்த்திகேயன்.
மிஸ்டர் லோக்கல் மே 17ம் தேதி வெளியாகிறது.