சர்வதேச விருதுகளை வென்ற கேடி என்கிற கருப்புதுரை

சரிகம குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால் (அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள படம் கேடி என்கிற கருப்பு துரை.

இத்திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.

‘வல்லமை தாராயோ, கொலகொலயா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை ஆகிய படங்களைத் தொடர்ந்து, மதுமிதா இயக்கியிருக்கும் இந்தப் படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ்ப் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் 8வயது அனாதை சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்புப் பாராட்டுவதுதான் இப்படத்தின் கதையாம்.

மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை, வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க, கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.

லண்டனில் நடைபெற்ற ஆசிய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த இயக்குனர் விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி விருதையும் வென்றிருக்கிறது.

மேலும், தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா, அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா, 100வது ஜாக்ரான் திரைப்பட விழா, நியூயார்க் இந்திய திரைப்பட விழா, ஒட்டாவா இந்திய திரைப்பட விழா என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Read Previous

ஒற்றைப் பனைமரம் – டிரைலர்

Read Next

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன்