டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வழங்க சாய்சேகர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சித்தார்த், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அருவம்’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குனர் சாய் சேகர், சித்தார்த், கேத்தரின் தெரேசா, இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சாய்சேகர் பேசுகையில்,
“நான் ரவீந்தரன் சாருக்கு படம் செய்தது புண்ணியம் என நினைக்கிறேன். சித்தார்த் இயல்பிலேயே இந்தக் கேரக்டருக்கு பொருந்திப் போகக் கூடியவர். நிஜத்தில் சுத்தத்தை போற்றக்கூடியவர், உயிர்களை நேசிப்பவர். அவர் தான் இந்தப் படத்திற்கு வேண்டும் என்று நினைத்து அவருக்காகவே எழுதினோம்.
‘அருவம்’ என்பது உருவம் இல்லாத ஒன்று. கதையில் அதற்கான காரணம் இருக்கும். ஏகாம்பரம் மிக சுறுசுறுப்பானவர், விஷுவலாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பானது. காத்ரீன் தெரசாவை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அவர் தன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உழைத்துள்ளார். பின்னணி இசையில் அற்புதம் செய்துள்ளார் தமன். கிளைமாக்ஸ் காட்சியாக வரும் இரவுக் காட்சியை பகலில் எடுத்திருக்கிறோம், அது மிகப் பிரம்மாண்டமானாதாக இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது, என்பது எங்கள் நம்பிக்கை. பாருங்கள், ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.
கேத்தரின் தெரேசா பேசியதாவது,
“அருவம் படத்தின் கதையைக் கேட்ட போது முதலில் அந்தப் படத்தில் இருந்த பெண் பாத்திரத்திற்கான முக்கியத்துவம் தான் எனக்குப் பிடித்தது. பல படங்களில் இது இருப்பதில்லை. மிக வித்தியாசமாக, அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த கேரக்டர் எழுதப்பட்டிருந்தது.
ஜோதி எனும் கேரக்டரை செய்வதில் உள்ள சாவால்களை விரும்பி ஏற்றேன். சித்தார்த் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் சீரியஸானவர் என நினத்தேன், ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். இயக்குநர் இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் எங்கள் உழைப்பை தந்திருக்கிறோம். இரண்டே பாடல்கள் தான் ஆனால் நன்றாக வந்துள்ளது, நீங்கள் கேட்டிருப்பீர்கள். மிக விரைவில் படம் வெளியாகிறது, உங்களை எல்லாம் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும்,” என்றார்.
சித்தார்த் பேசுகையில்,
“ரவி சார் போன் செய்து கமர்ஷியல் படம் இருக்கு கேட்கறீங்களா என்றார். நான் எப்போதும் ரொம்பவும் தேர்ந்தெடுத்து தான் படம் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் எந்தவொரு படத்தையும் எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் செய்கிறேன். இப்படத்தில் நம் உணவில் கலப்படம் பரவுவதை சொல்லும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கதை இருந்தது.
எனது கேரக்டர் சமூகத்தின் மீது கோபம் உள்ள கேரக்டர். எனக்கு உண்மையில் பொருந்தி போகக்கூடியது. அதற்காகத்தான் இந்தப்படம் செய்தேன். சில்வாவையும், ஏகாம்பரத்தையும் பல காலமாக தெரியும். தம்பி, தம்பி என என்னை பெண்டெடுத்து விட்டார்கள்.
படத்தின் விஷுவலுக்காகத்தான் இத்தனை உழைப்பும். காத்ரீனுக்கு இந்தப் படத்தில் மிகவும் கனமான கேரக்டர். எப்போதும் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினுக்கு பாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி இருந்தால் படம் நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் அது சரியாக அமைந்துள்ளது. சதீஷை காமெடியனாகத்தான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான குணச்சித்திர நடிகர் உள்ளார். அதை இந்தப்படத்தில் பார்க்கலாம். நிறைய உழைத்திருக்கிறோம், எல்லோருக்கும் பிடிக்கும்படி படம் இருக்கும்,” என்றார்.
‘அருவம்’ வரும் அக்டோபர் 11ம் தேதி வெளியாகிறது.