பப்பி – மொரட்டு சிங்கிள்களுக்கு சமர்ப்பணம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், மொரட்டு சிங்கிள் என்கிற நட்டு தேவ் இயக்கியிருக்கும் படம் ‘பப்பி’.

தரண்குமார் இசையமைத்துளள இந்தப் படத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் நட்டு தேவ், இசையமைப்பாளர் தரண்குமார், எடிட்டர் ரிச்சர்ட், ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாடி, வருண், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாயகி சம்யுக்தா ஹெக்டே பேசுகையில்,

“கோமாளி படத்திற்கு முன்பே இந்த ப்படத்தில் நடிக்க கமிட்டானேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இந்தப் படம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. வருண் மிக நல்ல நண்பராக மாறிவிட்டார். படத்தில் நாங்கள் நடித்த காட்சிகளில் நீங்கள் அதைப் பார்க்கலாம். பாடல்கள் இந்தப்படத்தில் மிக முக்கிய பங்கை வகித்துள்ளது. இப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

நாயகன் வருண் பேசியதாவது,

“என்னை சின்னச் சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்க. பப்பி படத்தின் கதையைக் கேட்ட போதே நாம் நாயகனாக நடிக்க இதுவே சரியான கதை என்று தோன்றியது. இது என் வாழ்க்கையை, இளைஞர்களை பிரதிபலிக்கும் கதையாக இருந்தது.

டிரெய்லரில் அடல்ட் மூவி மாதிரி இருக்கும். ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கும் க்யூட் லவ் மூவியாக இருக்கும். இதில் காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமே இருக்கிறது.

இயக்குநர் மிகவும் திறமையானவர் அவர் செய்வதில் பாதியை செய்தாலே போதும். இந்தப் படத்தில் ரசித்து ரசித்து வேலை பார்த்துள்ளேன். இந்தப்படத்தில் 6 நிமிடக் காட்சி ஒன்று உள்ளது, அது கண்டிப்பாக பேசப்படும் என நம்புகிறேன்.

சம்யுக்தா வேறு ஒரு படத்திற்காகத்தான் முதலில் வந்தார். மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். அவருடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. இயக்குநர் அதை உடைத்து நன்றாக எடுத்திருக்கிறார்.

யோகிபாபுவுடன் முதல் இரண்டு நாட்கள் நடிக்கத் தயக்கமாக இருந்தது. அதன் பிறகு மிகவும் நெருக்கமாகி விட்டார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன். இளைஞர்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் வேலை செய்த எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி. கனவிலேயே வாழும் அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்,” என்றார்.

இயக்குநர் மொரட்டு சிங்கிள் பேசுகையில்,

“இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமான மேடை. 7 வருடங்களுக்கு முன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது மேடையேறி இருக்கிறேன். என் அப்பா அம்மா எனக்கு அனைத்தையும் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வெற்றியை சமர்பிக்கிறேன்.

காக்கா முட்டை மணிகண்டன் சாரிடம் வேலை பார்த்த போது படத்தின் திரைக்கதையை பிரிண்ட் எடுக்க எங்களிடம் காசு இல்லை. அவர் உண்டியலை உடைத்து தான் பிரிண்ட் எடுத்தோம். தான் செய்வது சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர் அவர். அந்தப்படம் இன்று இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளது. அவரது பெயரைக் கெடுப்பது போல் இந்தப்படம் இருக்காது.

இது A படம் கிடையாது இது U படம். தயரிப்பாளர் ஒரு தந்தையை போல் தான் இருந்தார். அவரது கனவை நான் நிறைவேற்றி இருக்கிறேன். யோகிபாபுவை காக்கா முட்டை படத்திலிருந்தே தெரியும். இன்று அவர் இருக்கும் உயரம் அவருக்குத் தகுதியான இடம். அவர் எனக்காக இந்தப் படம் செய்துள்ளார். வருண் இந்தப் படத்தில் தன் முழுத்திறமையையும் தந்துள்ளார். சம்யுக்தாவை இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.

Read Previous

11 விதமான தோற்றங்களில் யோகி பாபு

Read Next

தமிழ் சினிமா – அக்டோபர் 4, 2019 வெளியாகும் படங்கள்