இளையராஜாவுடன் அனிருத்தை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது சரியா ?

ஏஆர் முருகதாஸ் இசையமைப்பில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இசையமைப்பாளர் அனிருத்தைப் பற்றி ரஜினிகாந்த் பேசுகையில்,

“அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. பேட்ட ஆல்பத்தை விட தர்பார் இன்னும் சிறப்பாக இருக்கும்,” என்று பேசினார்.

ஆயிரம் படங்களுக்கு மேல் பல்வேறு மொழிகளில் இசையமைத்து பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்து பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் இளையராஜா. அவர் ரஜினிகாந்த் படங்களுக்கும் இசையமைப்பார், அறிமுக நடிகருக்கும் இசையமைத்துக் கொடுத்து ஹிட்டுகளைக் கொடுத்தார்.

ஆனால், ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினரான அனிருத் அவருக்கு நெருக்கமானவர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். முன்பின் தெரியாத இயக்குனர்களுக்காகவோ, நடிகர்களுக்காகவே அவர் இதுவரை இசையமைத்ததில்லை. மேலும், 20 படங்களுக்குத்தான் இதுவரை இசையமைத்திருக்கிறார்.

அனிருத்தைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவரை இளையராஜாவுடன் ஒப்பிட்டுப் பேசியதும் தவறு. மற்ற இசையமைப்பாளர்களை மறைமுகமாகத் தாக்கியதும் தவறு என சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ரஜினிகாந்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்ததில் இளையராஜாவின் இசைக்கும் பெரும் பங்குண்டு. அப்பேர்ப்பட்ட இளையராஜாவின் மகனான யுவன்ஷங்கர் ராஜாவுக்குக் கூட இதுவரையிலும் தன் படங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை ரஜினிகாந்த் கொடுத்ததில்லை. ஆனால், உறவினரான அனிருத்துக்கு அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

அவர் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்க வேண்டும் என கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாம். ஆனால், இயக்குனர் சிவா, இமான் தான் படத்திற்கு இசையமைப்பார் என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

ரஜினிகாந்த்தின் இந்த ஒப்பீட்டுப் பேச்சு மற்ற இசையமைப்பாளர்களுக்கும் மிகுந்த வருத்தத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Read Previous

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விவரங்கள்…

Read Next

ரஜினிகாந்தின் தர்பார் – Jukebox