‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி

வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘தலைவி’. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்குகிறார். கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். நேற்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றத்தை வெளியிட்டார்கள். புகைப்படம் ஒரு டீசர் ஆகியவை வெளியிடப்பட்டன. இரண்டிலுமே எம்ஜிஆர் போலவே அச்சு அசலாக அரவிந்த்சாமி இருப்பதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். வீடியோவில் ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற பாடலைப் பாடி, ஆடும் அரவிந்த்சாமி அப்படியே எம்ஜிஆரின் உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார். இது பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், “தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்குக் கிடைத்த வரம். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கிப் பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு. இது ஒரு மிகப்பெரிய அனுபவம்.

இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறு உருவாக்கம் செய்வதும் மிக அவசியம் ஆகும். நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம். இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டு வருவது எளிதான செயல் அல்ல. அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதே விதமான லுக்கிற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார். திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப் பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம்,” என்றார். ‘தலைவி’ படம் 2020 ஜுன் 26ம் தேதியன்று வெளியாக உள்ளது.

Read Previous

‘மாநாடு’ – கலந்து கொள்ளப் போவது யார், யார் ?

Read Next

ஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்