பிளாக் கோல்டு – விமர்சனம்

தீரன் அருண்குமார் இயக்கத்தில், வெற்றி, பிரியாலயா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்‌ஷன் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.

மனிதர்களின் தலைமுடி ஏற்றுமதி வணிகத்தைப் பின்னணியாகக் கொண்டு, அதன் மூலம் உருவாகும் பணப்புழக்கம், போட்டி, பேராசை மற்றும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்தியப் பெண்களின் தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் இருக்கும் மதிப்பையும், அந்த வணிகத்தின் பின்னணியில் இயங்கும் மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் கதை நகர்கிறது. தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் மாரிமுத்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடி சரக்கு கடத்தப்படும் சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார். இதனால் அவர் மீது குற்றச்சாட்டு ஏற்படுகிறது. தனது தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்கவும், சரக்கு கடத்தலின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறியவும் களமிறங்கும் மகன் செல்வாவின் போராட்டம்தான் படத்தின் மீதிக்கதை.

வழக்கமாக தங்கம், வைரம், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் கிரைம் திரில்லர் படங்களுக்கு மத்தியில், பெண்களின் தலைமுடி ஏற்றுமதி வணிகத்தை மையக்கருவாகத் தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் வித்தியாசமான முயற்சி. தலைமுடிக்கும் சர்வதேச சந்தையில் இவ்வளவு பெரிய வணிக மதிப்பு இருக்கிறது என்பதையும், அதன் பின்னணியில் செயல்படும் வணிகக் குழுக்கள் மற்றும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கத்தையும் திரைக்கதையில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

செல்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி, அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். தந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற மகனின் போராட்டத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மாரிமுத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், தனது அனுபவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். செல்வான் காதலியாக சில காட்சிகளில் வந்து போகிறார் பிரியாலயா. வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரா அபிராமி வெங்கடாசலம் நடித்திருக்கிறார். அருள் டி சங்கர், ஏ. வெங்கடேஷ், தயாரிப்பாளர் மூர்த்தி, நிழல்கள் ரவி, துளசி, உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குநர் தீரன் அருண்குமார், அதிகம் பேசப்படாத ஒரு வணிகத்தைத் தேர்ந்தெடுத்து, அதை விறுவிறுப்பான கிரைம் திரில்லராக மாற்ற முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் கதையின் மையக்கருவும், அதனைச் சுற்றி உருவாகும் பிரச்சினைகளும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவு கதையின் களத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. கவாஸ்கர் அவினாஷின் இசை மற்றும் பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. ராவணனின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்திற்கு உதவுகிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களின் பாணியில் திரைக்கதை பயணிப்பது சற்று பலவீனம். ஆரம்பத்தில் வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இறுதிவரை தக்கவைத்திருக்கலாம். சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில், அதிகம் அறியப்படாத தலைமுடி ஏற்றுமதி வணிகத்தின் பின்னணியில் நடைபெறும் குற்றங்களையும், அதனால் பாதிக்கப்படும் மனிதர்களின் வாழ்க்கையையும் விறுவிறுப்பாகச் சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.

Read Previous

ஜான் டோ – விமர்சனம்