கோந்தல் – சர்வதேச டிரைலர் வெளியீடு

99வது ஆஸ்கர் விருதுக்கான இந்திய தேர்வுப் படம்

சந்தோஷ் தாவகார் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘கோந்தல்’.

99வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம் பெற்றுள்ள இப்படத்தின் சர்வதேச டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் நவம்பர் 13ஆம் தேதி இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மராத்தியில் ‘கோந்தல்’ (Gondhal) என்றால் குழப்பம், கூச்சல் அல்லது களேபரம் என்று பொருள்.

மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவின் வாழ்க்கையில் நிகழும் மர்மமான சம்பவங்களும், அவர்களுக்கிடையிலான உறவுச் சிக்கல்களும் கதையின் மையமாக அமைந்துள்ளன. ஆசை, கடமை, பக்தி ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளை உளவியல் த்ரில்லர் பாணியில் இப்படம் பேசுகிறது.

இப்படத்தில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி, நிஷாத் போயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தாவகார் தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் சார்பில் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். அமலேந்து சௌத்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் 25 நிமிடக் காட்சி இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 56வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை சந்தோஷ் தாவகார் பெற்றுள்ளார்.

ஏழு மொழிகளில் வெளியாகும் இப்படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் திரையிடப்பட உள்ளது.

Read Previous

கே.பி. ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’