கே.பி. ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய, பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்த கே.பி. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’.

தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், கே.பி. ஜெகன் தன்னுடைய பெயரிலேயே இயக்குநராக நடித்துள்ளார். விஜய் வர்மா மற்றொரு கதாநாயகனாக நடிக்க, ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இயக்குநர் திரைவண்ணன் மற்றும் சக்தி உமா பாலகிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மறைந்த தேனிசைத் தென்றல் தேவா கடைசியாகப் பாடிய ஆன்மீகப் பாடலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

சுக செல்வம் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வீரசமர் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாதி பெரும்பாலும் இயற்கையாகப் பெய்த மழையில் படமாக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இயக்குநர் கே.பி. ஜெகனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நகைச்சுவை மற்றும் திரில்லர் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட முன்வந்துள்ளனர். பாடல் வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Read Previous

குட் நியூஸ் – டப்பிங் பணிகள் ஆரம்பம்