மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், சாய் பிரபு ஜெயக்குமார் இணைத் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘குட் நியூஸ்’. அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கும் இப்படத்தில் ஜெயராம், அஷ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்குப் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தின் டப்பிங் பணிகள் நவம்பர் 11ஆம் தேதி சென்னை டி ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கின. முதற்கட்டமாக அஷ்வின் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கினார். இதில் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார், இயக்குநர் நாகேந்திர முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் மூலம் கல்யாணி அனில் கதாநாயகியாகத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரைஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்துக்குமார் இசையமைத்துள்ளார். அர்ஜுன் பாபு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.