ஜான் டோ – விமர்சனம்

ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ். சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஸாரா வினீத் சந்தோக், நீரவ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம் இது.

ஒரு அடையாளம் தெரியாத நபர் யார் என்பதிலிருந்து தொடங்கும் மர்மம், அவர் பாதிக்கப்பட்டவரா, கொலையாளியா அல்லது காணாமல் போன குழந்தையா என்ற பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் சந்துருவின் விசாரணையும், அதன் பின்னணியில் வெளிப்படும் மர்மங்களும்தான் படத்தின் மையக்கதை.

தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சந்துரு, ஒரு ஏரியில் விபத்துக்குள்ளாகும் காரிலிருந்து சிறுவனின் உடலை மீட்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது. சிறுவனின் அடையாளத்தைக் கண்டறிய முடியாத நிலையில், அந்த வழக்கு ‘ஜான் டோ’ எனப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே, மற்றொரு பகுதியில் சிறுவன் ஒருவர் காணாமல் போகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் கண்டறிய சந்துரு மேற்கொள்ளும் விசாரணைதான் படத்தின் சுவாரசியமான திருப்பம்.

வழக்கமான காவல்துறை விசாரணைக் கதையாகத் தொடங்கினாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியையும் மர்மத்துடன் அறிமுகப்படுத்தியிருப்பது திரைக்கதையின் பலம். குறிப்பாக, இறந்த சிறுவன் யார், காணாமல் போன சிறுவனுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு, இந்தச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகளை எழுப்பி, அடுத்தடுத்த காட்சிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

காவல் அதிகாரி சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது வழக்கமான கம்பீரமான உடல்மொழியிலிருந்து விலகி, தனக்குள் பலவிதமான தாழ்வு மனப்பான்மைகளையும் குற்ற உணர்வுகளையும் சுமக்கும் காவலராக சிறப்பாக நடித்திருக்கிறார். விசாரணைக் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.

மற்றொரு காவல் அதிகாரியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன், தனது அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஸ்ருஷ்டி, ஜாரா வினீத், நீரவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சிறுவன் நீரவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. அனுபமா குமார், அர்ச்சனா, படவா கோபி உள்ளிட்டோரின் பங்களிப்பும் கதைக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

வழக்கமான கிரைம் திரில்லர் படங்களில் இடம்பெறும் திடீர் திருப்பங்களை மட்டுமே நம்பியிருக்காமல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையிலும் இருக்கும் வலிகளையும் உளவியல் சிக்கல்களையும் கதையுடன் இணைத்திருப்பது இயக்குநர் மதுமிதாவின் சிறப்பு. மனிதர்களின் அன்புக்கான தேடல், குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல், அங்கீகாரத்திற்கான ஏக்கம் போன்ற உணர்வுகளையும் குற்றப் பின்னணியுடன் இணைத்திருப்பது படத்திற்கு கூடுதல் ஆழத்தைத் தருகிறது.

ஒளிப்பதிவாளர் பிரீத்தா ஜெயராமனின் கேமரா, தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியின் மலைக்கிராமச் சூழலையும் அதன் மர்மமான பின்னணியையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, இருள் சூழ்ந்த இடங்களிலும், பதற்றம் நிறைந்த விசாரணைக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு படத்தின் திகில் உணர்வுக்கு உதவுகிறது. முஜீப் மஜீத்தின் பின்னணி இசை மர்மத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கிறது. விஜய் வெங்கட்ரமணனின் படத்தொகுப்பும் பல இடங்களில் கதையின் வேகத்திற்குத் துணை நிற்கிறது.

அதேநேரம், சில காட்சிகளில் நீளமான வசனங்கள் திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் குற்றத்தின் பின்னணி மற்றும் அதன் செயல்முறைகளை விளக்கும் விதத்தில் இன்னும் அழுத்தமும் நம்பகத்தன்மையும் இருந்திருக்கலாம். கதையின் முடிவு ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக அமைந்திருப்பதும், சில பகுதிகளைச் சுருக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்பதும் குறைகள்.

மர்மம், குற்றம், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உணர்வுகள் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’. அர்ஜுன் தாஸ் மற்றும் சஞ்சனா நடராஜனின் நடிப்பு, கதாபாத்திரங்களுக்கான வலுவான பின்னணி, விறுவிறுப்பான விசாரணை எனக் கவனம் ஈர்க்கும் இப்படம், சில திரைக்கதை குறைகள் இருந்தாலும் கிரைம் திரில்லர் விரும்பிகளுக்குப் பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

Read Previous

Flag – விமர்சனம்