தி டார்க் ஹெவன் – விமர்சனம்

மலையாள சினிமாவில் தான் அதிகமான க்ரைம் திரில்லர் படங்கள் வரும். ஓடிடி தளங்களில் அவற்றைப் பார்த்து ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் சினிமாவில் எப்போதோ ஒரு முறைதான் தரமான க்ரைம் திரில்லர் படங்கள் வருகின்றன. இந்த ‘தி டார்க் ஹெவன்’ படம் அப்படியான ஒரு க்ரைம் திரில்லர் படம். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

‘தி டார்க் ஹெவன்’ என்ற புத்தகத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஒரு வெள்ளைக்காரர் எழுத ஆரம்பிக்கிறார். ஆனால், அவர் எதுவும் எழுதாமலேயே அந்த புத்தகத்தில் எதிர்காலத்தில் நடப்பது உள்ளிட்டவை தானாகவே எழுதப்படுகிறது. படத்தின் கதைப்படி 1970களில் அந்த புத்தகத்தின்படி சில விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2007ம் வருடத்தில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.

அந்த கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஜுன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறந்து போவார்கள். அப்படியான ஒரு மாதத்தில் அங்குள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறார் சித்து. அதற்கடுத்த சில நாட்களிலேயே அங்கு சில கொலைகள் நடக்கிறது. கேரளாவில் சீரியல் கொலைகளை செய்த ஒரு சைக்கோ கொலைகாரன் செய்த கொலைகளைப் போல இருக்கிறது.

அந்தக் கொலைகள் பற்றிய விசாரணையை ஆரம்பிக்கிறார் சித்து. ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஆண்கள் ஏன் இறக்கிறார்கள், அந்த ‘தி டார்க் ஹெவன்’ புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது, அதைத் தானாக எழுதியது யார், அதன் பின்னணி என்ன என்பதை மீதிக் கதை விவரிக்கிறது.

இன்ஸ்பெக்டராக கொஞ்சம் இறுக்கமான முகத்துடனேயே படம் முழுவதும் தனது விசாரணை வேலைகளைத் தொடர்கிறார் சித்து. சீரியல்களில் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. அந்த ஊரின் சூழ்நிலைக்கேற்றபடியும், ஊரில் உள்ளவர்களுக்கு ஏற்றபடியும் நடந்து கொள்ளும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அழுத்தமாகவே நடித்திருக்கிறார். சீரியல்களின் பலரின் மனதைக் கவர்ந்தவர், சினிமாவிலும் ரசிகர்களைக் கவர்வதற்கான படியாக இந்தப் படம் அமைந்துள்ளது.

சித்து கதாபாத்திரம் மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் குறிப்பிடும்படியான காட்சிகளும் உள்ளன. படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிள் ஆக பிரதீப் நடித்துள்ளார். சித்துவின் விசாரணைக்கு உதவும் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

சித்துவின் மனைவியாக தர்ஷிகா சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். ஒரு கட்டத்தில் அவர் எடுக்கும் ஒரு முடிவு அதிர்ச்சிகரமானது. அந்த ஊர் காவல்நிலையத்தின் திடீரென இறந்து போன முன்னாள் இன்ஸ்பெக்டரின் மனைவியாக ரித்விகா. ஊர் டாக்டராக நிழல்கள் ரவி, நாட்டாமையாக வேல ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டராக ஜெயக்குமார், பாதிரியார் ஆக அருள் டி சங்கர், ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் முத்திரை பதித்துள்ளார்கள்.

படத்திற்கு மணிகண்டன் தந்துள்ள ஒளிப்பதிவுத் தரம் படத்தை வேறொரு தளத்தில் ரசிக்க வைத்திருக்கிறது. மலைப் பிரதேச காட்சிகள், குறிப்பாக இரவுக் காட்சிகள் படத்திற்கான அந்த திரில்லர் அனுபவத்தை சரியாகக் கொடுத்துள்ளன. இசையமைப்பாளர் சக்தி பாலாஜியும் அவரது பின்னணி இசை மூலம் படத்தின் விறுவிறுப்பை கூட்டித் தந்திருக்கிறார்.

ஊரில் நடக்கும் கொலைகளுக்கு கேரளாவின் சைக்கோ கொலைகாரன் காரணமா அல்லது புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள, அந்த ஏழு வருட சாபடம் காரணமா, அல்லது ஊரில் உள்ளவர்கள் யாராவது இந்தக் கொலைகளை செய்கிறார்களா என தொடர்ந்து நமக்குள் கேள்வி எழுந்து கொண்டே போகிறது. யார் கொலைகளைச் செய்வது என்ற சஸ்பென்ஸ் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும் போது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் மீதான சந்தேகப் பார்வையை திரைக்கதையில் எங்கேயுமே உணர்த்தாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. இடைவேளைக்குப் பின்பான காட்சிகள் திரைக்கதையின் முடிச்சை அவிழ்ப்பதாக இருந்தாலும் சில இடங்களில் சற்றே தொய்வாக இருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

ஒரு தரமான க்ரைம் திரில்லர் படத்தை விரும்பிப் பார்க்க ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள் இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்காலாம். புதிய இளம் குழுவினர் நம்மை ஏமாற்றவில்லை.

Read Previous

நல்ல படம் – விமர்சனம்

Read Next

வேர்ல்டு ஆப் வேட்டுவம் – வீடியோ