நல்ல படம் – விமர்சனம்

மது பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி, அவரைச் சுற்றியிருக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நல்ல படம்’. மதுவுக்கு அடிமையானவர்களின் வாழ்க்கை, மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என சமூக அக்கறையுடன் சொல்லப்பட்டிருக்கும் இப்படம், காமெடி மற்றும் காதல் காட்சிகளுடன் தனது கருத்தை பதிவு செய்ய முயற்சித்திருக்கிறது.

நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருவதோடு, ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக பார் நடத்துபவர்கள் தங்களது பணிகளை முடித்த பிறகே மது அருந்துவார்கள். ஆனால், ஹரிஷோ தனது பாரை திறப்பதற்கு முன்பே மது அருந்த தொடங்கி விடுகிறார். எப்போதும் போதையிலேயே சுற்றித்திரியும் அவரை, மருத்துவம் படிக்கும் தனலக்‌ஷ்மி காதலிக்கிறார்.

ஹரிஷும் அவரது நண்பர்களும் எந்த நேரமும் மது போதையில் இருப்பதையே வாழ்க்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்களது மதுப்பழக்கத்தால் குடும்பத்திலும், சமூகத்திலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதைப் பற்றி அவர்கள் பெரிதாக கவலைப்படுவதில்லை. மதுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து, அவர்களை நல்வழிப்படுத்த குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மது பிரியர்களும், மதுவுக்கு அடிமையானவர்களும் மது கிடைக்காமல் தவிப்பதோடு, எப்படியாவது மதுவை பெற்றுவிட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எந்த வழியிலும் மது கிடைக்காது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்ளும் அவர்கள், படிப்படியாக மதுப்பழக்கத்தை மறந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.

மது இல்லாத வாழ்க்கைக்கு பழகிய பிறகு, அவர்களது குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம் ஏற்படுவதோடு, சமூகத்திலும் அவர்களுக்கு மதிப்பு கிடைக்கிறது. இதனால் தங்களது வாழ்க்கை சரியான பாதைக்கு திரும்பிவிட்டதாக அனைவரும் மகிழ்ச்சியடையும் நேரத்தில், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கான சூழல் உருவாகிறது. அதன் பிறகு ஹரிஷ் உள்ளிட்ட மதுவை மறந்தவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார்களா, அல்லது மதுவை ஒதுக்கிவிட்டு தங்களது புதிய வாழ்க்கையை தொடர்ந்தார்களா என்பதற்கு விடை சொல்வது தான் ‘நல்ல படம்’.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் ஏ.ஹரிஷ், தனது இளமையான தோற்றத்தால் கல்லூரி மாணவர் போன்றே தெரிகிறார். இதனால் மது பிரியர் மற்றும் மதுக்கூட உரிமையாளர் என்ற கதாபாத்திரம் அவருக்கு முழுமையாக பொருந்தவில்லை என்றாலும், நடிப்பில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளை இயல்பாக கையாண்டு சிரிக்க வைப்பவர், காதல் மற்றும் பாடல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனக்கான இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் தனலக்‌ஷ்மி, மது பிரியராக இருக்கும் ஹீரோவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் தனது கதாபாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருப்பவர், பாடல் காட்சிகளில் அழகாகவும் ரசிக்க வைக்கும் வகையிலும் வலம் வருகிறார்.

ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா, காமெடியில் தனி கவனம் பெறுகிறார். தனது உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் மைண்ட் வாய்ஸ் மூலம் பல இடங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். அவருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.

மொட்டா ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ், படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ற வகையில் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். வசனக் காட்சிகளில் எளிமையான அணுகுமுறையை கையாண்டிருப்பவர், பாடல் காட்சிகளில் இளமைத் துள்ளலுடன் காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பி.ஆர்.பிரகாஷின் பணியிலும் பெரிய குறைகள் இல்லை.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரபுராம்.சி, இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்தில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வித்தியாசமான களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

“மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு” என்று எச்சரிக்கை வாசகத்துடன் மதுபானங்களை விற்பனை செய்யும் அரசாங்கம், அந்த மதுக்கடைகளை முழுமையாக மூடினால் மட்டுமே மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க முடியும் என்ற கருத்தை இயக்குநர் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார்.

திரைப்படமாக பார்க்கும்போது, குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருப்பது சில இடங்களில் தெரிந்தாலும், தான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகவும் நேர்த்தியாகவும் சொல்ல முடியாமல் சற்று தடுமாறியிருக்கிறது. இருந்தாலும், முக்கியமான சமூக பிரச்சனையை கமர்ஷியல் அம்சங்களுடனும் காமெடி கலந்து சொல்ல முயற்சித்திருப்பதற்காக இயக்குநர் பிரபுராம்.சி, தயாரிப்பாளர் ஏ.அழகு பாண்டியன் மற்றும் நாயகன் ஹரிஷ் ஆகியோரை பாராட்டலாம்.

Read Previous

மக்களுக்கு நன்றி சொன்ன ‘மண்டாடி’ குழுவினர்

Read Next

தி டார்க் ஹெவன் – விமர்சனம்