தமிழ் சினிமாவில் வங்கி கொள்ளை என்ற கரு புதிதல்ல. ஆனால் அதை எடுத்துக்கொண்டு, அதில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு சாதாரண மனிதனை மையப்படுத்தி, காட்சிக்கு காட்சி திருப்பங்களைப் பின்னி, பார்வையாளர்களை நொடி நொடியும் மூச்சு விடாமல் வைத்திருப்பது எளிதான காரியமல்ல. ‘ஐ, நோபடி’ அந்த சவாலை வெற்றிகரமாகச் சந்தித்திருக்கிறது.
மூன்று பேர் ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும் போது, அங்கிருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனை பிணைக் கைதியாக அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அவரை விடுவிக்கும் தருணத்தில், அவர்களில் ஒருவரின் முக்கிய ஆதாரம் பிரித்விராஜின் கையில் சிக்குகிறது. ஆனால் விபத்து காரணமாக மூவரும் உயிரிழக்கின்றனர். கொள்ளைப் பணத்தை மீட்க முடியாமல் போலீஸ் தவிக்கிறது. ஆனால் பிரித்விராஜ் ஏன் அந்த வங்கிக்கு வந்தார்? அவருக்கு அங்கு எந்த தொடர்பும் இல்லை என்றாலும், நீண்ட நேரம் அங்கு தங்கியிருந்தது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதனால் அவர்மீது சந்தேகம் எழுந்து, ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்துவதால் பிரித்விராஜ் மட்டுமல்ல, அவரது குடும்பமும் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறது.சிக்கல்களிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு முயற்சியும் புதிய சிக்கல்களை உருவாக்கி, அவரை ஒரு சிக்கலான வலைக்குள் இழுக்கிறது. அந்த வலைக்குள் இருந்து அவரும் குடும்பமும் எப்படி மீண்டனர்? கொள்ளைப் பணம் எங்கே போனது? இந்த புதிர்களைத் தீர்க்கும் விதம் கதையை பதட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
வங்கி கொள்ளை சம்பவம் கதையின் மையமாக இருந்தாலும், அதில் எந்த சம்பந்தமும் இல்லாத பிரித்விராஜ் கதாபாத்திரத்தை வைத்து, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை என முழு படக்குழுவும் அற்புதமான திரை மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. இது பார்வையாளர்களின் முழு கவனத்தையும் தொடர்ந்து கவர்ந்து வைத்திருக்கிறது.
கதாநாயகனாக நடித்த பிரித்விராஜ் சுகுமாரன், துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழையும் ஆரம்பக் காட்சியிலிருந்தே தனது மௌனத்தின் மூலம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறார். பிணைக் கைதியாக இருக்கும் போது வீங்கிய கண்களுடன் அறிமுகமாவதும், தன் இளைய மகளிடம் மட்டும் பேசி தனது வாழ்க்கைச் சம்பவங்களை கதையாகச் சொல்வதும், சிக்கல்களை எதிர்கொள்ள சாதாரண மனிதனாக போராடுவதும் – அவரது நடிப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதீத ஆக்ஷன் காட்சிகளிலும் நம்பகத்தன்மையுடன் நடித்து, கதாபாத்திரத்தின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரித்விராஜின் மனைவியாக நடித்த பார்வதி திருவோத்து, முதுமையின் அடையாளங்களுடன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இயல்பான நடிப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான பாவங்களால் மனதில் பதிந்து விடுகிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்த ஹக்கிம் ஷாஜகான், அமைதியான முகபாவனையுடன் தேடல் மிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு தனித்துவம் சேர்த்திருக்கிறார்.
ஜேக்கப் பாத்திரத்தில் அசோகன், முதல்வராக விஜயராகவன், டி.எஸ்.பியாக சங்கர் ராமகிருஷ்ணன், குற்றப்பிரிவு அதிகாரியாக மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக ஜியா மற்றும் இளைய மகளாக நடித்த சிறுமி – அனைவரும் தங்கள் சிறு சிறு உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம் கதையின் பதட்டத்தை அதிகரிக்கவும், திருப்பங்களுக்கு ஏற்றவாறு கவனத்தைத் தக்க வைக்கவும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர்.
‘ஐ, நோபடி’ வெறும் கொள்ளைப் படம் அல்ல. அது ஒரு மனிதனின் அப்பாவித்தனம், சந்தேகம், போராட்டம், குடும்ப உறவுகள் என்ற பல அடுக்குகளை அழகாகப் பின்னிய திரில்லர்.