“மௌனகுரு, மகாமுனி” படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், ரேகா வெங்கடேஷ், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரசவாதி’.
மே 10ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படம் பற்றி இயக்குனர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,
“எனது ஒவ்வொரு படத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்? என்பது தான் என்னிடம் கேட்கும் முதல் கேள்வியாக இருக்கிறது. நான் கதை எழுதவோ, திரைக்கதை எழுதவோ அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதில்லை, படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விசயங்களால் தான் இடைவெளி ஏற்படுகிறது. இனி அந்த இடைவெளி அதிகம் இருக்காது.
‘ரசவாதி’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எனது அடுத்த படத்தை தொடங்கிவிடுவேன், அதற்கான கதையும் ரெடியாக இருக்கிறது.
இப்படத்தில் ஆக்ஷன், திரில்லர், காதல் என அனைத்தும் இருக்கிறது. என் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது, வைக்கக் கூடாது என்பதில்லை, கதை அதை கேட்கவில்லை. ஆனால், இந்தக் கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. கதைக்கு அது தேவைப்படுகிறது. 
நாயகன் அர்ஜுன் தாஸ் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். இரண்டு விதமான தோற்றத்தில் நாயகனைக் காட்ட வேண்டும், அதற்கு அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார் என்று தோன்றியதால்தான் அவரை நாயகனாக தேர்ந்தெடுத்தேன். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதன் சாயல் இந்தப் படத்தில் இருக்காது, படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.
நாயகன் சித்த மருத்துவர் என்பதால் இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல, இது ஒரு ஆக்ஷன் திரில்லர் காதல் கதை தான். அவரைப் போல் மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுவரை இவ்வளவு பெரிய வேடத்தில் நடித்ததில்லை. அவருடைய நடிப்பு நிச்சயம் வியப்பை தரும், அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் அவரது நடிப்பை பார்த்து கை தட்டினார்கள், திரையிலும் அது பிரதிபலிக்கும்.
‘மெளனகுரு’ படம் முடித்துவிட்டு ‘மகாமுனி’ படத்தின் திரைக்கதை எழுதுவதற்காக கொடைக்கானலில் ஒருவாரம் தங்கலாம் என்று சென்றேன். ஆனால், அங்கு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த நாட்கள், எனது கொடைக்கானல் அனுபவம் மூலம் எழுதப்பட்ட கதை தான் இது. 
படத்தில் ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களின் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறேன். அல்கெமிஸ்ட் என்ற பெயரில் நாவல் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சினிமாவில் இதுவரை அல்கெமிஸ்ட் என்ற தலைப்பு பயன்படுத்தவில்லை, அதனால் அதை பயன்படுத்தியிருக்கிறேன். தயாரிப்பாளராக உருவெடுத்ததற்கு காரணம் சுதந்திரம் தான். சுதந்திரமாக இயங்கலாம் என்று முடிவு செய்து தான் தயாரிப்பில் இறங்கினேன். நான் எழுத்துப் பணியை முடித்துவிட்டு, படப்பிடிப்புக்கு செல்வதால், எவ்வளவு நாட்களில் படத்தை முடிப்பேன், என்பது எனக்கு முன்பே தெரிந்துவிடும், அதனால் தயாரிப்பாளராக எனக்கு எந்த சிரமும் இல்லை.
50 நாட்களில் ரசாவதி படத்தை முடித்துவிட்டேன். தயாரிப்பாளராக தொடர்வேனா என்றால் அது எனக்கு தெரியாது, ஆனால் நான் எழுதுவதையும், இயக்குவதையும் தான் விரும்புகிறேன், அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்,” என்றார்.