சந்திப்பிற்கு பணம் கொடுங்கள் என்று அனுராக் கஷ்யாப் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அனுராக் கஷ்யாப். இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமானாலும் தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் அடுத்ததாக ‘மஹாராஜா’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 23) தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“சினிமா குறித்து பேச பலரும் என்னை சந்திக்கிறார்கள். நானும் புதிதாக வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சந்திக்கிறேன். தான் ஒரு அறிவுஜீவி என்று நினைத்து வருபவர்களுடன் இனி என் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை.
இனிமேல் 10-15 நிமிடங்கள் பேச வேண்டுமென்றால் 1 லட்சம், அரை மணி நேரம் என்றால் 2 லட்சம், ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் கொடுத்தால் மட்டுமே என்னை சந்தித்துப் பேச முடியும். இனிமேல் பணம் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே என்னை அழையுங்கள். இல்லையென்றால் விலகி இருங்கள்”
இவ்வாறு அனுராக் கஷ்யாப் தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பதிவு இணையத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.