ஜி.வி.பிரகாஷின் படங்கள் யாவுமே சரியாக திட்டமிடப்படாமல் வெளியாகி, தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை வரவைக்கிறது.
முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தாலும், நடிப்பிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ‘ரெபல்’ படத்தில் நடித்திருந்தார். மார்ச் 22-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இது கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.
இதனிடையே, ’ரெபல்’ வெளியான அடுத்த நாளே ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ’கள்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இணையத்தில் ‘ரெபல்’ என்ற படம் வெளியான சுவடே இல்லாமல் ‘கள்வன்’ ஆட்கொண்டது. ஏப்ரல் 4-ம் தேதி ‘கள்வன்’ வெளியாகவுள்ளது.
‘கள்வன்’ விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள மற்றொரு படமான ‘டியர்’ வெளியீட்டுத் தேதி இன்று (மார்ச் 24) மாலை வெளியாகவுள்ளது.
ஒரு படம் வெளியாகி சில காலங்கள் கழித்தே, மற்றொரு படத்தின் வெளியீட்டு விளம்பரங்கள் வெளிவர தொடங்கும். ஆனால், ஜி.வி.பிரகாஷின் 3 படங்கள் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்படுவது இணையத்தில் ஒருவித குழப்பத்தையே உருவாக்கும் என்பதை யார் உணரப் போகிறார்களோ எனத் தெரியவில்லை.