ஓடிடி ட்வீட்டினால் வெளியான கார்த்தி படத் தலைப்பு

அமேசான் ஓடிடி ட்வீட்டினால் கார்த்தி நடித்துவரும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கார்த்தி. இந்தப் படத்தினை நலன் குமாரசாமி இயக்கி வந்தார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமத்தினால், 2டி நிறுவனம் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கிய படத்தினைத் தொடங்கினார் கார்த்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிவடைந்துவிட்டது. தற்போது மீண்டும் நலன் குமாரசாமி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.

கார்த்தி – நலன் குமாரசாமி படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற அமேசான் ஓடிடி விழாவில் கார்த்தி – நலன் குமாரசாமி படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

இதனிடையே, இந்தப் புகைப்படங்களை அமேசான் ஓடிடி நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அதோடு சேர்த்து இந்தப் படத்தின் தலைப்பான ‘வா  வாத்தியார்’ என்பதையும் ஹேஷ்டேக்கில் சேர்த்துவிட்டது. ‘வா வாத்தியார்’ என்ற தலைப்பு தகவலாக வெளியானாலும், அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

அமேசான் ட்வீட்டினால் ‘வா வாத்தியார்’ தான் தலைப்பு என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே இயக்குநரின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் பதிவின் மூலம் கார்த்தியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது வெளியாகிவிட்டது.

ஒரு பிரம்மாண்ட படத்தின் தகவல்கள் இவ்வாறு சாதாரணமாக வெளியாகி இருப்பது அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Read Previous

சரியாக திட்டமிடாத ஜி.வி.பிரகாஷின் படங்கள்: தயாரிப்பாளர்களின் நிலை?

Read Next

’தங்கலான்’ வெளியீடு எப்போது?