‘தங்கலான்’ வெளியீடு எப்போது இருக்கும் என்று தனஞ்ஜெயன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’தங்கலான்’ படத்தின் டீஸர் மட்டுமே இதுவரை வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகாத காரணத்தினால், விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.
தற்போது ‘தங்கலான்’ படத்தின் வெளியீடு எப்போது இருக்கும் என்பதை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தனஞ்ஜெயன் அளித்துள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் ‘தங்கலான்’ வெளியீடு குறித்து கூறியிருப்பதாவது:
”தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்பார்த்த தேதியை விட நாடாளுமன்ற தேர்தல் தேதி தள்ளிப் போயிருக்கிறது. இதனால் ஏப்ரல் மாத இறுதியில் யாரெல்லாம் வெளியீட்டு தேதி திட்டமிட்டார்களோ, அவர்கள் அனைவருமே வெளியீட்டை தள்ளி வைத்துவிடார்கள். வெளிநாட்டு வெளியீட்டிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன.
இதனால் தேர்தல் அனைத்தும் முடியட்டும். 100 கோடியில் எடுக்கப்பட்ட ஒரு படத்தினை, சாதாரணமாக வெளியிட்டு விட முடியாது. சரியான தேதி, திட்டமிடல் என அனைத்துமே சரியாக அமையும் பட்சத்தில் மட்டுமே வெளியிட முடியும். இப்போது இருக்கும் சூழல் அனைத்தும் சரியான உடன் சரியான தேதி சொல்கிறேன் என்று ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேதி, ஐபிஎல் போட்டிகள் என அனைத்துமே முடிந்தவுடன் தான் ‘தங்கலான்’ வெளியாகும். அது ஜூன் மாதமாக இருக்கலாம்”
இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.